ஜேர்மனி நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பிரதானிகளுடன் ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் இணையவழி மூலம் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். தமிழ் மக்களின் பிரச்னைகள் குறித்தும் நிரத்தர அரசியல் தீர்வு குறித்தும், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்தும் இதன் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஜேர்மனி வெளிவிவகார அமைச்சின் ஆசிய பிராந்தியத்திற்கான தலைவர் திருமதி சபின் சிட்லர் மற்றும் இலங்கைக்கான விசேட அதிகாரி மரியோ கியோரி ஆகியோருடன் ஆறு தமிழ் கட்சி தலைவர்கள் இணையவழி மூலம் கலந்துரையாடினர். இந்த கலந்துரையாடலில் தமிரரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ்மக்கள் கூட்டணியின் தலைவர்.சி.வி. விக்னேஸ்வரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் கூட்ட ஏற்பாட்டாளரும் ரெலோ பேச்சாளருமான குருசாமிசுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், கோவிந்தன் கருணாகரம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் பிரத்தியேக காரணங்களால் பங்குபெற்ற முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகால இடைவெளிக்குப் பின்னராக, ஐநா மனித உரிமைப் பேரவையில் முக்கிய நாடாகவும், ஐ.நா பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடாகவும் இருக்கும் உலக வல்லரசுகளில் ஒன்றான ஜேர்மனியுடன் நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தை அரசியல் ரீதியாகவும் இராஜதந்திர ரீதியாகவும் மிகவும் முக்கியம் வாய்ந்தது என தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்தனர். தமிழ் மக்கள் சார்ந்த பல்வேறு விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டன. தற்பொழுது ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. ஐ.நா மனித உரிமைப் பேரவையில் பிரதான நாடாக அங்கம் வகிக்கும் ஜேர்மனி, தமிழ் மக்கள் சார்ந்து ஆதரவு நிலைப்பாட்டில் தொடர்ந்தும் செயல்பட்டு வருவதற்காக நன்றி தெரிவிக்கப்பட்டது. மனித உரிமை ஆணையாளரின் 46/1 அறிக்கையில் பரிந்துரைக்கப் பட்ட பிரகாரம் இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப் படுத்துவதற்கான கோரிக்கையை ஐ.நா பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தமிழ் கட்சித் தலைவர்களால் பிரதானமாக முன்வைக்கப்பட்டது. ஐ.நாவில் பல்வேறு பிரேரணைகள் நிறைவேற்றப் பட்ட போதிலும், அவை இலங்கை அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் நிராகரிக்கப்பட்டாலும் விடயங்கள் இன்று வரை நடைமுறைப்படுத்தப் படாமல் இருப்பதை அவதானிக்க முடிகிறது என தமிழ் கட்சித் தலைவர்களால் சுட்டிக் காட்டப்பட்டது. அரசியல் கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், காணி அபகரிப்பு, இன குடிப் பரம்பல் சிதைப்பு, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் நடைபெறுகின்றமை, புனர் வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் எதிர்கொள்ளும் நிலை என்ற பல அவசரமான பிரச்னைகள் பற்றி இதன்போது ஆராயப்பட்டது. நிரந்தர அரசியல் தீர்வுக்கான கோரிக்கைகள் சர்வதேச சமூகம் உட்பட தமிழர் தரப்பு வலியுறுத்தி வந்தாலும் இலங்கை அரசாங்கங்கள் அதை நிறைவேற்றும் நோக்கங்களில் அர்ப்பணிப்பு அற்ற நிலையே தொடர்ச்சியாகக் காணப்படுகிறது. தற்பொழுது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சூழ்நிலையில் இருந்து நாடு மீள வேண்டிய தேவை உள்ளது. அதற்கான ஆதரவை தமிழ்த் தரப்புகள் நிபந்தனையின் அடிப்படையில் வழங்குவதற்கு தயாராக உள்ள போதிலும் அரசு தங்கள் உறுதிமொழிகளை நிறைவேற்றுமா என்ற சந்தேகம் காணப்படுவதாகவும், அதேநேரம் சர்வதேச சமூகம் இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் வேளையில் தமிழர்களுடைய அரசியல் தீர்வு பற்றிய கரிசனை கொள்வது நன்மை பயக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கு பதில் வழங்கிய திருமதி சபின் சிட்லர், நீதிப் பொறிமுறையை நடைமுறைப் படுத்துவதற்கான ஏற்பாடுகளில் பிரதான நாடுகளுடன் தாங்கள் தொடர்ந்து முயற்சிப்பதாகத் தெரிவித்தார். ஐ.நா பொறிமுறைக்கு வெளியிலும் குறிப்பாக ஜி.எஸ்.பி வரிச்சலுகை, இலங்கைக்கான நிதி வழங்கல் என்பவற்றினூடாக தாங்கள் இலங்கையை பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றிற்கு வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார் எதிர்வரும் செப்ரெம்பர் மாத ஜெனீவா மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் தமிழ் மக்களின் சார்பாக கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் தெரிவித்த பல்வேறு கருத்துக்களை ஜேர்மனி அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு அவற்றை ஐ.நாவில் பிரதிபலிக்கும் வகையில் பிரதான மற்றும் அங்கத்துவ நாடுகளுக்கு தாங்கள் முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் உறுதி அளித்தார்