டக்ளஸ் என்ன கூறுகின்றார்?

0
184

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் நடவடிக்கைகளில் தான் ஈடுபட்டுள்ளார் எனவும் தமிழ் கட்சிகள் அதற்கு ஒத்துழைப்பு வழங்காமல் பிரச்னைகள் தொடர்வதையே விரும்புகின்றன என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
அரசாங்கத்தின் அங்கமாக இருக்கும் ஒருவர் அரசாங்கத்தை நியாயப்படுத்துவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
மகிந்த ராஜபக்ஷ ’13 பிளஸ்’ என்று கூறி தமிழர் பிரச்னையை தட்டிக்கழித்த போதும் டக்ளஸ் தமிழ் கட்சிகளையே குற்றஞ்சாட்டினார்.
கோட்டாபய ராஜபக்ஷ 13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டபோதும் டக்ளஸ் தமிழ் கட்சிகள் மீதே குற்றஞ்சாட்டியிருந்தார்.
இப்போது ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தப்போகிறார் என்றும் அதற்கு தமிழ் கட்சிகள் ஒத்துழைப்பு
வழங்கவில்லை எனவும் கூறுகின்றார்.
அரசமைப்பிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதாக ரணில்தான் கூறினார்.
அதன் பின்னர் தமிழ் கட்சிகளோடு சில சுற்று பேச்சுகளில் ஈடுபட்டார்.
ஆனால், ரணில் கூறியது போன்று, அதில் முன்னேற்றங்களை அவர் இதுவரையில் நிரூபிக்கவில்லை.
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் விடயத்துக்கு தமிழ் கட்சிகளின் சம்மதம் அவசியமற்றது.
ஒருவேளை அது தேவையென்றாலும்கூட, 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில், இந்திய எதிர்ப்பு கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸை தவிர, ஏனைய பிரதான தமிழ் கட்சிகள் எவையுமே எதிர்ப்பு வெளியிடவில்லை.
இந்த நிலையில் தமிழ் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லையென்று கூறுவது பொருத்தமற்றது.
டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி பல தசாப்தங்களாக அரசாங்கங்களின் பங்காளியாக செயல்பட்டு வருகின்றது.
குறிப்பாக இறுதி யுத்தத்தின்போது, மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அங்கம் வகித்தது.
மகிந்த ராஜபகஷ பல்வேறு சந்தர்ப்பங்களில் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பிலும் அதற்கப்பால், செல்வது தொடர்பிலும் பேசியிருந்தார்.
இந்தியாவுக்கும் அவ்வாறான வாக்குறுதியை வழங்கியிருந்தார்.
ஆனால், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இருந்த டக்ளஸ் தேவானந்தா இந்த விடயத்தில் எவ்வாறான செயல்பாடுகளை முன்னெடுத்தார்? இதற்காக உள்ளுக்குள் எவ்வாறான அழுத்தங்களை ஏற்படுத்தினார்? டக்ளஸ் தேவானந்தா ஓர் அமைச்சராக இருந்ததன் மூலம் அவரின் அமைச்சின் எல்லைக்குட்பட்டு சில விடயங்களை முன்னெடுத்திருக்கலாம்.
அவை அமைச்சர்கள் பலரும் செய்கின்ற பணிகள்தான்.
ஆனால், அரசியல் தீர்வு விடயத்தில் எந்தவொரு முன்னேற்றத்துக்காகவும் டக்ளஸ் செயல்பட்டமைக்கு சான்றுகள் இல்லை.
அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசிய கட்சிகளே பிரதான பங்கை வகித்திருக்கின்றன.
ஆனால், சில சந்தர்ப்பங்களை அவர்கள் சரியாகக் கையாளவில்லை என்பதில் உண்மை இல்லாமல் இல்லை.
குறிப்பாக, 2015இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, மாகாண சபை முறைமையைப் பலப்படுத்துவதன் ஊடாக முன்னோக்கி பயணித்திருக்க முடியும்.
அதற்கு பதிலாக புதிய அரசியல் யாப்பு விடயத்தில் கூட்டமைப்பு காலத்தை விரயம் செய்தது.
ஆனால், இந்த விடயத்தை முதன்மைப்படுத்தி அரசாங்கத்தின் அங்கமாக இருக்கின்ற ஒரு கட்சி தமிழ் கட்சிகள் மீது குற்றம்சாட்டிவிட முடியாது.
ஏனெனில், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் அரசாங்கத்தின் அங்கமாக இருக்கின்றபோது உச்சபட்சமான அழுத்தங்களை பிரயோகித்து அது முடியாத போது – அதற்காக அரசாங்கத்திலிருந்து வெளியேறியிருந்தால் அவரின் குற்றச்சாட்டுகளுக்கு அர்த்தம் இருக்க முடியும்.