டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணம் குறையாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டிலான் மிரண்டா தெரிவித்தார்.
பேருந்து கட்டணத்தை குறைக்க வேண்டுமானால் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 வீதம் அல்லது அதற்கு மேல் குறைக்கப்பட வேண்டும்.
தற்போது, 430 ரூபாவாக இருந்த டீசல் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. 4 சதவீதத்திலும் பார்க்க குறைவாகும் எனவே, பேருந்து கட்டணத் திருத்தை மேற்கொள்ள இந்த விலைக்குறைப்பு போதுமானதல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பெற்றோலின் விலை குறைந்துள்ள போதிலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் மாற்றம் செய்ய முடியாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக் தெரிவித்துள்ளார்.
கட்டணத்தில் மாற்றம் தேவையென்றால், முச்சக்கர வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளின் ஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதன்படி வாரத்துக்கான பெற்றோல் ஒதுக்கீட்டை 5 லீற்றர் வரை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் எரிபொருளின் விலையை குறைத்தாலும் கறுப்பு சந்தையில் அதிக விலை கொடுத்து பெற்றோலை கொள்வனவு செய்ய நேரிடும் எனவே எரிபொருள் விலையை குறைப்பதால் தமக்கு எந்த நன்மையும் ஏற்படாது எனவும் தலைவர் தெரிவித்தார்.
தமக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டால், முச்சக்கரவண்டிக்கான கட்டணத்தை நிச்சயம் குறைப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போது முதல் கிலோமீற்றருக்கு 120 ரூபாவும், அதன்பின்னர் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 100 ரூபாவும் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.