ட்ரம்பின் நடவடிக்கையால் 2026 இல் யுனிசெப்பின் திட்டங்கள் 20 சதவீதம் வீழ்ச்சியடையுமாம் !!

0
6

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளிநாடுகளுக்கான மனிதாபிமான உதவியை குறைத்துள்ளமையினால் 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பீடுகையில் 2026 ஆம் ஆண்டில் யுனிசெப் திட்டங்கள் 20 சதவீதம் வீழ்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனை, ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அமைப்பான யுனிசெப்பின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டில் யுனிசெப்பிற்கு 8.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இவ் ஆண்டு 8.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் ஐ.நா. அமைப்புகள் உட்பட மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி அமைப்புகள் கடந்த சில வாரங்களாக நிதி நெருக்கடிக்கு மத்தியில் இருப்பது தெளிவாகியுள்ளது.  அதிலிருந்து  யுனிசெப்பும் தப்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுனிசெப் நேரடியாக  அமெரிக்காவை குறிப்பிடவில்லை என்றாலும்,  யுனிசெப்பிற்கு நீண்ட காலமாக வொஷிங்டன் மிகப்பெரியளவில் நன்கொடைகளை வழங்கி வருகிறது.

1946 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட யுனிசெப் அமைப்பின் அனைத்து நிர்வாக பணிப்பாளர்களும் அமெரிக்கர்களாகவே உள்ளனர்.

“தற்போது, 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026 ஆம் ஆண்டில் எங்கள் நிதி ஆதாரங்கள் குறைந்தபட்சம் 20 சதவீதம்  அமைப்பு ரீதியாக குறைவாக இருக்கும் என கணித்துள்ளோம்,” என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜனவரியில் இரண்டாவது முறையாக பதவியேற்றதிலிருந்து, அவரது “அமெரிக்காவுக்கு முன்னுரிமை” என்ற கொள்கையுடன்  திட்டங்கள் ஒத்துப்போவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு பில்லியன் கணக்கான டொலர்கள் வெளிநாட்டு உதவியைக் குறைத்துள்ளார்.