“விவசாயிகளின் நலனே எங்களுக்கு முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்காக எந்த விலையும் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக, இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்துள்ளது. இந்த நடவடிக்கை குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு, பிரதமர் மோடி பதிலளித்துள்ளார்.
புதுடெல்லியில் நடந்த எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “எங்களைப் பொறுத்தவரை, விவசாயிகளின் நலனே எங்களுக்கு முதன்மையான முன்னுரிமை. விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் விவசாயிகளின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. அதற்காக நாம் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பது எனக்குத் தெரியும். நான் அதற்குத் தயாராக இருக்கிறேன். இந்தியா அதற்குத் தயாராக உள்ளது.” என்றார்.
இந்தியப் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடியின் இந்தப் பேச்சு அமைந்துள்ளது.
50% வரி: முதலில் இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டது. இது ஆகஸ்ட் 7- ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தாவிட்டால், கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரித்தார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வரும் நிலையில், இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதல் வரிகளை விதிக்கும் உத்தரவில் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம், அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான மொத்த வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
‘அமெரிக்காவின் நடவடிக்கை ஏற்கக்கூடியதல்ல. இது நியாயமற்றது. தேச நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும். நாட்டு மக்களின் எரிசக்தி தேவையை உறுதி செய்வதே அரசின் முக்கிய நோக்கம்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ரஷ்யாவிடம் இருந்து உரம், யுரேனியத்தை அமெரிக்கா தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது. இதுகுறித்து ட்ரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘எனக்கு அதுபற்றி தெரியாது. இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு சரிபார்க்கிறேன்’’ என்றார்.