ட்ராவிஸ் ஹெட், ஸ்டீவன் சுமித் சதம் விளாசல்! 400 ஓட்டங்களை கடந்தது ஆஸி

0
30

ட்ராவிஸ் ஹெட் 152, ஸ்டீவன் சுமித் 101 ஓட்டங்கள் அடித்து கொடுத்த நிலையில் அவுஸ்திரேலிய அணி, 7 விக்கெட்கள் இழப்புக்கு 405 ஓட்டங்கள் குவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கிண்ண டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியாவும், அடிலெய்டில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் அவுஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1 – 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நேற்று தொடங்கியது.

இதில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. அந்த அணி 5. 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி பாதிக்கப்பட்டது.

அரை மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் போட்டி தொடங்கியது. ஆட்டத்தின் 13ஆவது ஓவரை ஆகாஷ்தீப் வீசினார்.

அப்போது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் மீண்டும் தடைப்பட்டது. மழை விடாமல் தொடர்ந்து பெய்தது. இதனால், முதல் நாள் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக நடுவர்கள் அறிவித்தனர்.

அப்போது, அவுஸ்திரேலிய அணி 13. 2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 28 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில், 2ஆவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது.

உஸ்மான் கவாஜா 21 ஓட்டங்களுடனும், மெக்ஸ்வீனி 9 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய லபுசனே 12 ஓட்டங்களில் வெளியேறினார்.

அடுத்ததாக ஸ்டீவன் சுமித் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். நிதானமாக ஓட்டம் சேர்ந்த இந்த ஜோடியில் ஸ்டீவன் சுமித் தனது அரைச் சதத்தை பதிவு செய்தார்.

இந்த நிலையில், அடிலெய்ட் டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து காபாவிலும் இந்திய அணிக்கு எதிராக அவுஸ்திரேலியா வீரர் ட்ராவிஸ் ஹெட் சதம் விளாசினார்.

முன்னதாக இந்த மைதானத்தில் கடந்த 3 இன்னிங்ஸ்களில் ட்ராவிஸ் ஹெட் ( 0(1), 0 (1), 0 (1) ) முதல் பந்தில் ஆட்டமிழந்திருந்தார்.

ஆனால், இந்தப் போட்டியில் 152 ஓட்டங்களைக் குவித்து இந்திய அணிக்குப் பெரும் நெருக்கடி கொடுத்தார். மறுமுனையில் ஸ்டீவன் சுமித் 101 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த இருவரும் இணைந்து அவுஸ்திரேலிய அணிக்கு முதல் இன்னிங்ஸில் சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்துள்ளனர்.

இதனால் அந்த அணி இன்றைய நாள் ஆட்டநேர முடியில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 405 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.