தங்களை தாங்களே காயப்படுத்திய 20 மாணவர்கள் – கிளிநொச்சியில் அதிர்ச்சி சம்பவம்!

0
208

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள் பிளேட்டால் தங்கள் கைகளை  தாங்களே கீறிக் காயப்படுத்தினர் என்று சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு  முன் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மாணவர்களே பிளேட்டால் இவ்வாறு தங்கள் கைகளை கீறியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

ஒருவரைப் பார்த்து மற்றொருவர் இவ்வாறு நடந்ததாலேயே தங்களைத் தாங்களே காயப்படுத்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகத் தெரிய வருகின்றது.

“கோபத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஓரிரு மாணவர்கள் செய்வதனை பார்த்து ஏனைய மாணவர்களும் இவ்வாறு செய்து கொண்டதாகவும், கட்டிளம் பருவத்தில் மாணவர்கள் இது போன்ற ஹீரோயிசம் எனும் போர்வையில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுப்படுவதாகவும் உளநல மருத்துவர் ம. ஜெயராசா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைகளில் வெட்டிக்கொள்ளும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் போதை பொருள் பாவணைக்கு அடிமையான மாணவர்கள் அல்ல எனுவும் குறிப்பிட்டார்.

அத்தோடு கைகளை  வெட்டிக் கொள்ளும் மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைள் நிறைவுற்று வேலை வாய்ப்புக்களுக்காக முக்கியமாக நீதித்துறை மற்றும் பொலிஸ், இராணுவம் உள்ளிட்ட பல தொழில் துறைகளுக்கு நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்லும் பெரும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த மாணவர்களுக்கு தாங்கள் உளவியல்  ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.