தமிழக மீனவர்கள் இலங்கையர்களால் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரிடம் சுட்டிக்காட்டியுள்ள தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின், இவ்வாறான சம்பவங்கள் எதிர்வருங்காலங்களில் நிகழ்வதைத் தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து உடனடியாக மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே மேற்குறிப்பிட்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இந்திய மீனவர்கள்மீது கடந்த 15 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் உங்களுடைய அவதானத்திற்குக் கொண்டுவரவிரும்புகின்றேன்.
இச்சம்பவத்தில் நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகரைச்சேர்ந்த 6 மீனவர்களை உள்ளடக்கிய மீன்பிடி படகு கடந்த 15 ஆம் திகதி தோப்புதுறையின் தென்பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது, சுமார் 10 இலங்கைப்பிரஜைகளை உள்ளடக்கிய 3 படகுகள் இந்திய மீனவர்களின் படகுகளைச் சுற்றிவளைத்ததுடன் அதிலிருந்த இந்திய மீனவர்கள் இரும்புக்கம்பி, தடிகள் மற்றும் கத்தி ஆகியவற்றினால் தாக்கப்பட்டனர்.
இத்தாக்குதல் சம்பவத்தினால் மீனவரொருவருக்கு தலையிலும், இடது கையிலும் காயங்கள் ஏற்பட்டிருப்பதுடன் ஏனைய 5 மீனவர்களுக்கு உள்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதுமாத்திரமன்றித் தாக்குதல் நடாத்திய இலங்கையர்கள் வோக்கிடோக்கி, ஜி.பி.எஸ் கருவி, பற்றரி மற்றும் 200 கிலோகிராம் மீன் சுமார் 2 இட்சம் இந்திய ரூபா பெறுமதியான பொருட்களை எடுத்துச்சென்றிருப்பதாகவும் அறியமுடிகின்றது. இதில் காயமடைந்த மீனவர்கள் சிகிச்சைகளுக்காக நாகப்பட்டினம் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையர்களால் நடாத்தப்படும் இத்தகைய தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்கின்றன என்பதை சுட்டிக்காட்ட நேர்வதையிட்டு நான் கவலையடைகின்றேன்.
எனவே, இதனைத் தடுப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளும் அதேவேளை, இவ்வாறான வன்முறைச்சம்பவங்கள் எதிர்வருங்காலங்களில் நிகழ்வதைத் தடுக்கும் வகையில் இத்தகைய சம்பவத்தில் தொடர்புபட்டுள்ள இலங்கையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்துகின்றேன் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.