வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் இருந்து இந்தத் தடவை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களில் தனியொரு கட்சியைச் சேர்ந்த கூடுதல் எண்ணிக்கையானவர்கள் என்றால் அவர்கள் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களே.
தேசிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் முன்னரும் இரு மாகாணங்களில் இருந்தும் பாராளுமன்றத்துக்கு தெரிவாகினார்கள். ஆனால், இந்த தடவை நடந்திருப்பதைப் போன்று ஒரு தேசிய கட்சி அதுவும் ஓர் இடதுசாரிக்கட்சி தமிழ்பேசும் மக்களை பாரம்பரியமாக பிரதிநிதித்துவம் செய்துவந்த அரசியல் கட்சிகளை இவ்வாறாக தோற்கடித்ததில்லை.
யாழ்ப்பாண மாவட்டத்தின் ஆறு பாராளுமன்ற ஆசனங்களில் மூன்று ஆசனங்களை கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியவாத கட்சிகளினால் ஒவ்வோர் ஆசனத்துக்கு மேல் பெறமுடியாமல் போகிற அளவுக்கு அவற்றை பின் தள்ளியிருக்கிறது. மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர ஏனைய நான்கு மாவட்டங்களிலும் கூடுதல் ஆசனங்களைக் கைப்பற்றிய முன்னிலைக் கட்சியாக தேசிய மக்கள் சக்தி சாதனை படைத்திருக்கிறது. இந்த அரசியல் கோல மாற்றத்துக்கு உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான காலப்பகுதியில் தமிழ்க்கட்சிகளின் செயல்பாடுகளில் மக்களுக்கு ஏற்பட்ட விரக்தியும் வெறுப்பும் காரணமா அல்லது ஜனாதிபதி திஸநாயக்கவினதும் அவரது கட்சியினதும் கொள்கைகள் மீதான ஈர்ப்பு காரணமா? தமிழ் மக்கள் வாக்களித்த முறையை தமிழ்க் கட்சிகளும் தேசிய மக்கள் சக்தியும் எவ்வாறு வியாக்கியானப்படுத்துகின்றன என்பது அறிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விடயமாகும்.
இரு மாகாணங்களிலும் தங்களுக்கு எட்டு ஆசனங்கள் கிடைத்ததை ஒரு வெற்றியாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் சில தலைவர்கள் பெருமைப்படுகிறார்கள். முன்னைய பாராளுமன்றத்தில் தங்களுக்கு இருந்த ஆறு ஆசனங்களையும் விட இரு ஆசனங்களை கூடுலாக தந்து தமிழ் மக்கள் தங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான அரசியல் இயக்கமாக மீண்டும் அங்கீகாரத்தை வழங்கியிருப்பதாகவும் அந்த தலைவர்கள் தர்க்கநியாயம் செய்கிறார்கள். ஆனால், தமிழ் அரசுக் கட்சி பெற்றிருக்கும் ஆசனங்களின் எண்ணிக்கை குறித்து பெருமைப்படுவதையும் விட தேசிய மக்கள் சக்தியினால் இரு மாகாணங்களிலும் தமிழ்க் கட்சிகளை பின்தள்ளி எவ்வாறு கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றக்கூடியதாக இருந்தது என்பதை பற்றி சிந்தித்துப் பார்க்க வேண்டியதே முக்கியமானதாகும்.
கடந்த காலம் குறித்து சுயபரிசோதனை செய்வதில் ஒரு போதும் அக்கறை காட்டாத தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தற்போதைய நிலைவரம் குறித்தாவது ஆழ்ந்து சிந்திப்பார்கள் என்று எதிர்பார்ப்பது கஷ்டமாக இருக்கிறது. இது இவ்வாறிருக்க, வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை பாராளுமன்றத்தில் பிரதி நிதித்துவம் செய்யும் பிரதான அரசியல் கட்சியாக – எட்டு ஆசனங்களுடன் என்றாலும் – விளங்கும் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர்கள் அதன் எதிர்காலம் குறித்து ஆழமாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் அரசுக் கட்சி அதன் வரலாற்றில் முன்னென்றும் இல்லாத அளவுக்கு உட்பூசல்களினால் சீர்குலைந்து கிடக்கிறது. பாரம்பரியமாக அதன் கோட்டையாக விளக்கிய யாழ்ப்பாண மாவட்டமே கைவிட்டுப் போயிருக்கிறது.
இவ்வருட முற்பகுதியில் திருகோணமலையில் நடைபெற்ற தலைவர் தேர்தலுக்கு பிறகு கட்சி உள்ளுக்குள் எத்தனை முகாம்களாக இருக்கிறதோ தெரியாது, ஆனால் வெளிப் படையாக இரு முகாம்களாக பிளவுபட்டு நிற்கிறது. கடந்த பதினைந்து வருடங்களாக பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்து வந்த மதியாபரணம் சுமந்திரனும் சிவஞானம் சிறீதரனுமே அந்த எதிரெதிர் முகாம்களின் ‘தளபதிகள்’. சுமந்திரனால் இந்த தடவை பாராளுமன்றத்துக்கு தெரிவாக முடியவில்லை. அதேவேளை அவர் தெரிவாகாமல் போனதும் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினராக கூடுதல் விருப்பு வாக்குகளுடன் தான் தெரிவானதும் இன்றைய தமிழர் அரசியலின் கோலங்களுக்கு மத்தியில் சிறீதரன் பெரிதாகப் பெருமைப்படக்கூடிய அம்சங்கள் அல்ல.
தமிழ் அரசு கட்சிக்குள் நிலவும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர இணக்கப்போக்கை கடைப்பிடிப்பதிலும் தலைமைத்துவத் தகராறை முடிவுக்கு கொண்டுவருவதிலும் சிறீதரன் அக்கறை காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை விலக்கிக்கொள்ளச் செய்து கட்சியின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்பதற்கான வழிமுறைகளை அவர் கடைப்பிடிக்கவேண்டும். தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் பாராளுமன்றத்துக்கு தெரிவானவர்களில் அனுபவம் கூடியவர் என்ற முறையில் அதன் பாராளுமன்றக் குழுவின் தலைவராக பதவியேற்று தனது தலைமைத்துவ ஆளுமையை சீறீதரன் நிரூபிக்க வேண்டும்.
சிந்தித்துச் செயல்படாவிட்டால் எதிர்காலத் தேர்தல்களில் பாதிப்பு மேலும் மோசமாகலாம். சுமந்திரனும் இது விடயத்தில் தனது பக்குவத்தை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறோம்.