ஒரு சமுதாயத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பது, அந்த சமூகத்தின் அரசியல் தலைமையாகும்.
அதிலும் உரிமைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் ஓரினத்தின் தலைமைத்துவமானது, சாதாரண அரசியல் கட்சிகள் போன்று செயலாற்ற முடியாது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் தலைமையென்பது, எப்போதும் அர்ப்பணிப்பிற்கும் தியாகங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும்.
மக்களை முடிந்தவரையில் ஓரணியாக பேணிப்பாதுகாக்கும் விடயங்களுக்கே முன்னுரிமையளிக்க வேண்டும்.
பிளவுற்றிருக்கும் தரப்புக்களையும் முடிந்தவரையில் ஓரு பொது வேலைத்திடத்திற்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.
ஆனால் தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதோ வேறு.
தேர்தல் நலன்களை முன்னிறுத்தி இடம்பெற்று வரும் விடயங்களை உற்றுநோக்கினால், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்றுமே சாத்தியப்படாதோ – என்னும் சந்தேகமே மேலெழுகின்றது.
ஏனெனில் சிலரது செயற்பாடுகள் இவ்வாறான சந்தேகத்தையே ஏற்படுத்துகின்றது.
சிங்கள ஆட்சியாளர்கள் சில நெருக்கடிகளால் ஒரு கட்டத்தில் இறங்கிவந்தாலும் கூட, அதனை பயன்படுத்திக்கொள்வதற்கு தமிழ் அரசியல்வாதிகள் விடுவார்களா? தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடவும் தமிழரசு கட்சியே மேலானதென்னும் நிலைப்பாட்டின் அடிப்படையில்தான், தமிழரசு கட்சி, கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது.
இந்த நிலையில், நேற்றுவரையில் ஒன்றாக இருந்தவர்களை மோசமாக தாக்கும் புதிய அரசியல் போக்கொன்று மெதுவாக முகம் காட்டுகின்றது.
இது ஆரோக்கியமானதல்ல.
ஒரு கட்சியை பிறிதொரு கட்சி அரசியல்ரீதியில் விமர்சிப்பது, ஜனநாயக அரசியலில் சாதாரணமான விடயமாகும்.
ஆனால் நேற்றுவரையில் ஒன்றாக பயணித்தவர்கள் மீது, மோசமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் போது, அது இது வரையில் கூட்டமைப்பிற்கு வாக்களித்திருக்கும் மக்களையும் அவமானப்படுத்துவதாகும்.
மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில்தான் தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்கின்றனர்.
2009இல் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, 2020 இடம்பெற்ற பொதுத் தேர்தல் வரையில், தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே பெருவாரியாக ஆதரித்து வந்திருக்கின்றனர்.
அந்தக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்தோடு, தற்போது தமிழரசு கட்சி தனியாக சென்றிருக்கின்றது.
இந்த வெளியேற்றம் சரியென்று தமிழரசு கட்சியினர் கருதினால் தங்களுடைய அரசியல் நிலைப்பாடுகளையும், அதனை அடையும் வழிமுறைகள் தொடர்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
அவ்வாறில்லாது, தென்னிலங்கை சிங்கள கட்சிகள் செய்வதுபோன்று அல்லது முஸ்லிம் கட்சிகள் செய்வது போன்று, வெறும் தேர்தல் அரசியலை முன்னெடுக்க முடியாது.
தேர்தல் ஒரு பிரதான விடயமாக இருந்தாலும் கூட, தமிழ் தேசிய அரசியலில் அது மட்டுமே பிரதான விடயமல்ல.
அதற்கப்பால் மக்களை ஓர் அரசியல் திரட்சியாக பேணிப்பாதுகாத்துக் கொள்ளும் வகையிலேயே தமிழ் தேசிய கட்சிகளின் அரசியலை முன்னெடுக்க வேண்டும்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல், தனிக்கட்சிகளுக்கும் கூட்டமைப்பிற்குமான போட்டியாகவே அமையப் போகின்றது.
வாக்குகளை சேகரிப்பதற்கான நடவடிக்கைகளை கட்சிகள் முன்னெடுக்கும் போது, அரசியல் நாகரிகம் பேணப்பட வேண்டும்.