நாட்டின் அரசியல் நிலைமைகள் எவ்வாறு நகரப் போகின்றன என்பதை இப்போதைக்கு ஊகிக்க முடியாது.
அரசியலை துல்லியமாக எவராலும் கணிக்க முடியாது.
ஆனால், கடந்த கால அனுபவங்களை முன்வைத்து சில ஊகங்களை செய்யமுடியும்.
இந்த பின்புலத்தில் நோக்கினால் இலங்கைத் தீவின் எதிர்காலம் என்பது அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்தான் நிலை கொண்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரையில் அவர் – அவரின் அரசியல் வாழ்வில் – அவருக்கான இறுதி அரசியல் பரீட்சையை எழுதவுள்ளார்.
அவரைப் பொறுத்தவரையில் இந்தப் பரீட்சையில் வெற்றிபெற்றேயாக வேண்டும்.
ரணில் அடிப்படையில் ஜனவசியமுள்ள தலைவராக இருந்ததில்லை.
ஆற்றல்மிக்க ஓர் அரசியல்வாதியாக இருந்தபோதிலும்கூட அவரால் சாதாரண சிங்கள மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை.
ஆனால், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் அசாதாரண அரசியல் சூழலும் அவரை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்தியிருக்கின்றது.
அதிகாரத்தில் இருந்தாலும்கூட மக்கள் ஆணையை பெறாத ஒருவராகவும் அதேவேளை பாராளுமன்ற பலமில்லாத ஒருவராகவுமே அவர் இருக்கின்றார்.
இந்த பின்புலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர்தான் நாட்டின் எதிர்காலம் தொடர்பில் தெளிவானதொரு முடிவுக்கு வரமுடியும்.
இந்த பின்புலத்தில் தமிழர் தரப்புகள் என்ன செய்யப் போகின்றன? வெறுமனே தங்களுக்குள் – யார் சுத்தமானவர்களென்று முட்டி மோதிக் கொண்டிருக்கப் போகின்றனவா அல்லது சூழ்நிலைகளை துல்லியமாகக் கணித்து, அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக் கொள்ளப்போகின்றனவா? அரசியலில் – அதிலும் குறிப்பாக, அதிகாரத்தை கோரும் மக்கள் கூட்டம் ஒன்றை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் தரப்புகள் தங்களை சதா தயார்படுத்திக் கொண்டும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப புதுப்பித்துக் கொண்டுமிருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் புதிய சவால்களை எதிர்கொள்ள முடியாமல் போய்விடும்.
இலங்கைத் தீவின் அரசியலில் ஏதோவொரு வகையில் இந்திய, அமெரிக்க, சீனா ஆகிய நாடுகளின் முக்கோண வியூகத்துக்குள் சிக்கியிருக்கின்றது.
இலங்கை விரும்பினால்கூட இதிலிருந்து விடுபட முடியாது.
இவ்வாறானதொரு பின்புலத்தில் குறித்த சக்திகள் என்ன சிந்திக்கின்றன – அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு நோக்குகின்றன?
இந்தக் கேள்விகளுக்கு இப்போதைக்கு எதனையும் ஊகிக்க முடியாது.
ஆனால், நம்மிடம் கடந்தகால அனுபவங்கள் இருக்கின்றன.
2015 ஆட்சி மாற்றத்தின்போதான அனுபவங்கள் இருக்கின்றன.
இவற்றை கருத்தில் கொண்டு தமிழர் தரப்பு தங்களை எவ்வாறான சவால்களுக்கும் முகம் கொடுக்கக் கூடியவாறு தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.
பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உச்சளவில் வெற்றிகொள்ளும் உபாயங்கள் தொடர்பிலும் சிந்திக்க வேண்டும்.
இதேவேளை, புதிய சவால்களை எதிர்கொள்வதற்கான ஆற்றலுடனும் இருக்க வேண்டும்.
இது தொடர்பில் தமிழர் தரப்பு சிந்திக்க வேண்டும்.