தமிழர் பிரச்னையில் அமெரிக்கா?

0
158

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிபுணர்கள் குழுவொன்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு சென்று வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா தொடர்பில் சுமந்திரன் எதிர்வு கூறலொன்றை செய்திருந்தார்.
அதாவது, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தின் நடுப்பகுதிக்குள் அமெரிக்கா உறுதியான சில தீர்மானங்களை எடுக்கவுள்ளது.
இதனை சிலர் அப்போது பாரதூரமான விடயமாகக் கருதிக் கொண்டனர்.
ஆனால், நிபுணர் குழுவில் பங்குகொண்ட கலாநிதி நிர்மலா சந்திரஹாசன் மற்றும் சட்டத்தரணி கனக ஈஸ்வரன், சந்திப்புக்கள் தொடர்பில் எங்குமே பேசவில்லை.
அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து பயணிக்கும் வகையில் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் சுமந்திரன் புலம்பெயர் சமூகத்திடம், கூறியிருந்தார்.
ஆனால், இறுதியில் அனைத்துமே புஸ்வாணமானது.
தற்போது வெளியாகியுள்ள மனித உரிமைகள் பேரவையின் பிரேரணையை எடுத்து நோக்கினால், அமெரிக்கா தொடர்பான அனைத்துக் கணிப்புக்களும் தவறென்று நிரூபணமாகிவிட்டது.
ஏனெனில், தற்போது வெளியாகியிருக்கும் பிரேரணை நகலின்படி குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வகையில் அதில் முக்கியமான மாற்றங்கள் இடம்பெறவில்லை.
தமிழர் தரப்புக்களின் கோரிக்கைகள் பெரிதாகக் கருத்தில் கொள்ளப்படவில்லை.
இணையனுசரணை நாடுகளின் பிரதிநிதிகளின் உரைகளிலும் வழமையான சொற்களே மீளவும் உச்சரிக்கப்பட்டிருக்கின்றன.
தற்போது, ஆகக் குறைந்தது, அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளித்தல் – என்னும் விடயத்தையாவது செயல்பாட்டு பந்தியில் சேர்க்கலாமா என்னும் முயற்சியில் சில புலம்பெயர் அமைப்புக்கள் ஈடுபட்டு வருகின்றன.
அதுவும் நடைபெறுமா என்பது கேள்விக்குறிதான்.
அமெரிக்கா மீளவும் மனித உரிமைகள் பேரவையில் இணைந்திருக்கும் நிலையில், அமெரிக்கா சில தலையீடுகளை செய்யலாமென்னும் எதிர்வுகூறல்களை பலரும் வெளியிட்டிருந்தனர்.
ஆனால், எதிர்பார்த்தது போன்று அமெரிக்கா பிரத்தியேகமான தலையீடுகளை செய்யவில்லை.
அமெரிக்காவின் உலகளாவிய கரிசனையென்னும் வகையில், மனித உரிமைகளை பாதுகாத்தல் என்னும் விடயத்தையே அது தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.
இந்தப் பின்புலத்தில் நோக்கினால் தமிழர் பிரச்னையில் – குறிப்பாக தமிழ் மக்களுக்கு ஓர் உறுதியான அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென்னும் கோரிக்கையை அமெரிக்கா இதுவரையில் வெளிப்படுத்தியதில்லை.
நாட்டின் அனைத்து மக்களின் மனித உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் கோரிக்கையையே தொடர்ந்தும் முன்வைத்து வருகின்றது.
குறிப்பாக ‘தமிழ் மக்கள்’ என்னும் விடயத்தைக்கூட அமெரிக்க இராஜதந்திர தரப்பினர் இதுவரையில் உச்சரித்ததில்லை.
சிறுபான்மை என்னும் அடிப்படையிலேயே விடயங்கள் நோக்கப்படுகின்றன.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அழுத்திக் குறிப்பிடும் ஒரேயொரு நாடாக இந்தியா மட்டுமே இருக்கின்றது.
இதற்கு இந்திய – இலங்கை ஒப்பந்தமே பிரதான காரணமாகும்.
சுமந்திரன் கூறியது போன்று, அமெரிக்காவும் இந்தியாவும் தமிழர் பிரச்னையை ஒரு நேர் கோட்டில் அணுகியிருந்தால், இந்தியாவின் நிலைப்பாட்டுடன் அல்லவா அமெரிக்கா நின்றிருக்க வேண்டும்.
ஆனால், நிலைமைகளை அவதானித்தால் அவ்வாறான நகர்வுகளை காணமுடியவில்லை.
எனவே, அமெரிக்கா தமிழர் பிரச்னையில் அதிகம் தலையீடு செய்யும் என்பது ஒரு தவறான பார்வையாகும்.
ஓர் உலக சக்தியென்னும் வகையில், இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் பெரும்பான்மை மக்களான சிங்கள மக்களை அதிகம் விலகிச் சென்றுவிடாத வகையில்தான் அமெரிக்காவின் அணுகுமுறை இருக்கும்.
எனவே, அமெரிக்காவின் தமிழர்களுக்காக தலையிடும் ஆர்வம் மிகவும் வரையறுப்பட்டது.
இதனை விளங்கிக் கொள்ளாமல் தேவையற்ற வகையில் மக்கள் மத்தியில் நம்பிக்கையூட்டுவதில் பயனில்லை.
ஆனால், இலங்கையின் ஆட்சி அதிகாரம் தொடர்பிலும் – அது எவ்வாறானவர்களின் கையிலிருக்க வேண்டும் என்பதிலும் அமெரிக்காவுக்கு தெரிவுகள் இருக்கலாம்.
அது அமெரிக்காவின் உலகளாவிய ஆர்வத்துடன் தொடர்புபட்டது.
எனவே, தமிழர்கள் என்னும் அடிப்படையில் அமெரிக்கா விடயங்களை பார்ப்பதற்கான தேவைப்பாடு இல்லை.
இதுவரையில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படவில்லை.
ஒருவேளை அவ்வாறான தேவை ஏற்பட்டால் அமெரிக்கா கூடுதல் ஆர்வத்தையும் காண்பிக்கலாம் – ஆனால், அவ்வாறானதொரு சூழலில் கூட இந்தியாவின் ஆர்வமே பிரதானமாக இருக்கும்.
இந்தியாவின் ஆலோசனையின்றி மேற்குலகம் இந்தப் பிராந்தியத்தில் தலையீடு செய்வது இயலாத காரியமாகும்.