இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. அத்துடன், தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில்லை என்னும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதனை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாவட்ட கிளைகள் நிராகரித்திருக்கின்றன. திருகோணமலையில் தொடங்கிய பகிஷ்கரிப்பு தற்போது கிளிநெச்சி மாவட்டக் கிளையிலும் பிரதிபலித்திருக்கின்றது.
இதே போன்று, மட்டக்களப்பில் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் அங்கம் வகிப்பவர்கள் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்திலும் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரித்து கூட்டங்கள் நடைபெறவுள்ளன. அவ்வாறாயின் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்துக்கு என்ன பெறுமதி உண்டு? தமிழ் அரசுக் கட்சி தற்போது யாருடைய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றது? எவருடைய கட்டுப்பாட்டிலும் இல்லையா? தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் ‘நாளொரு மேனி பொழுதொரு மேனி’ என்பதுபோல் நடந்து கொள்கின்றார்.
அவர் நிதானமாகத்தான் இருக்கின்றாரா என்று கேட்குமளவுக்கு நிலைமைகள் காணப்படுகின்றன. தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்தை முதலில் ஆட்சேபித்திருந்த மாவை சேனாதிராசா பின்னர் கட்சியின் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் – தற்போது ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கின்றார். தமிழ் அரசுக் கட்சியின் நிலைமை இந்தளவு மோசமாகியிருப்பது தொடர்பில் நிச்சயம் கவலைப்படத்தான் வேண்டும்.
ஒரு பாரம்பரியக் கட்சி மிகவும் மோசமான நிலைமைக்கு சென்றிருக்கின்றது. இந்த நிலைமை பிறிதொரு விடயத்தையும் உணர்த்துகின்றது. அதாவது, பாரம்பரிய கட்சிகளின் காலம் முடிவுறுகின்றது. ஒரு புதிய அரசியல் கலாசாரம் – அதனை முன்கொண்டு செல்ல புதிய ஆற்றலுள்ள நபர்கள் தேவைப்படுகின்றனர்.
தமிழ் அரசுக் கட்சி உறுதியான நிலையில் இல்லை. மிகவும் பலவீனமான நிலைமையை அடைந்திருக்கின்றது. அதன் உறுப்பினர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் இருக்கின்றனர். உண்மையில், தமிழ் அரசுக் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள்தான் மிகவும் பரிதாபத்துக்கு உரியவர்கள். தலைவர்களை அளவுக்கதிகமாக நம்பியதால் நடுவீதியில் நிற்கின்றனர். சுமந்திரனின் செல்வாக்கால் கொண்டுவரப்பட்ட தமிழ் அரசுக் கட்சியின் தீர்மானம் கேள்விக்கு உள்ளாகியிருக்கின்றது. உண்மையில் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முடிவை எடுத்திருக்கும் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு அதனை அமுல்படுத்தும் ஆற்றலை இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக பிரசாரங்களை செய்ய முடியாமல் போனால் அந்தத் தீர்மானத்தின் பெறுமதி என்ன?