கடந்த இரண்டு தசாப்தங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் பிரதான அரசியல் தலைமையாக நீடித்துவருகின்றது.
ஆனால், இந்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்குமா என்னும் கேள்வி எழுந்திருக்கின்றது.
குறிப்பாக, இரா. சம்பந்தன் அரசியலில் இயங்க முடியாத நிலையிருக்கும் நிலையில், தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருவிதமாகவும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்னொரு விதமாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளருக்கு பங்காளிக் கட்சிகள் விக்னேஸ்வரன் அணியோடு இணைந்து கடிதங்களை அனுப்புகின்றன.
தமிழ் அரசு கட்சி தனியாக செயல்பட்டு வருகின்றது.
தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் தரப்புக்கள் ஓர் அணிக்குள் இருந்தவாறே முற்றிலும் மாறுபட்ட வகையில் செயல்படுகின்றனர்.
உண்மையில் பங்காளிக் கட்சிகள் கூட்டமைப்பில் இருந்தவாறு தனியான கடிதங்களை அனுப்புவது – அதிலும், கடந்த தேர்தலில் கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டியிட்டவர்களோடு இணைந்து செயல்படுவதானது அடிப்படையிலேயே முரண்பாடான விடயமாகும்.
இந்த நிலைமையின் உண்மையான காரணம் என்ன?
கூட்டமைப்பின் எதிர்காலம் தொடர்பான அச்சத்திலிருந்தே பங்காளிக் கட்சிகள் தங்களை பலப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் மெதுவாக ஈடுபட முயற்சிக்கின்றன.
இதன் காரணமாகவே இவ்வாறான செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், பங்காளிக் கட்சிகளுடன் பேசவுள்ளதாக தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் இவ்வாறான பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், எவையுமே நடைமுறைக்கு வரவில்லை.
அண்மைக்காலமாக தமிழ் அரசுக் கட்சி தனித்து செல்ல வேண்டும் என்றவாறான அபிப்பிராயங்களை தமிழ் அரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் முன்வைத்து வருகின்றனர்.
தனித்து செல்வதால் இலாபமடையக் கூடியவர்களே அவ்வாறான கருத்துக்களை முன்வைக்கின்றனர்.
ஆனால், தனித்துச் செல்வதால் தங்களுக்கு பாதகமான விளைவுகள் ஏற்படலாமென்று எண்ணுபவர்கள் எவ்வாறாயினும் கூட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டுமென்று எண்ணுகின்றனர்.
ஏனெனில், தமிழ் அரசுக் கட்சியின் செல்வாக்கும் கணிசமாக வீழ்சியடைந்திருக்கின்றது.
இந்த நிலையில் தனித்து சென்றால், இப்போது வீட்டுச் சின்னத்துக்கு கிடைத்திருக்கும் பத்து ஆசனங்களை நிச்சயம் பெற முடியாது.
இந்த நிலைமையைக் கணிப்பவர்கள் ஏதோவொரு வகையில் பங்காளிக் கட்சிகளையும் இழுத்துக் கொண்டு பயணிக்க வேண்டுமென்றே எண்ணுகின்றனர்.
இதன் காரணமாக தமிழ் அரசுக் கட்சிக்குள்ளும் கூட்டமைப்பு தொடர்பில் இரண்டு விதமான கருத்துக்கள் இருக்கின்றன.
மாவை சேனாதிராசா மற்றும் அவருக்கு ஆதரவானவர்கள் கூட்டமைப்பைத் தக்கவைக்க வேண்டுமென்றே கருதுகின்றனர்.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களோடு பேசுவதென்னும் முடிவு எட்டப்பட்டிருக்கின்றது.
இது வெறுமனே பேசுகின்ற விடயம் மட்டுமல்ல.
கடந்த இரண்டு தசாப்த கால கூட்டமைப்பின் பயணத்தில், ஒரு தசாப்த காலம் விடுதலைப் புலிகளின் ஆளுகைக்குள் இருந்தது. அதன் பின்னரான கடந்த ஒரு தசாப்த காலம் தமிழ் அரசு கட்சியின் ஆளுகைக்குள் இருந்தது.
விடுதலைப் புலிகளின் காலம் முற்றிலும் வேறுபட்டது.
எனவே, தமிழ் அரசு கட்சியின் ஆதிக்கத்தின் கீழ்தான் கூட்டமைப்பு தொடர வேண்டுமென்று எண்ணுவது தவறானது.
ஒரு கூட்டமைப்புக்கான அரசியல் கட்டமைப்பு மற்றும் அரசியல் ஒழுக்கத்தோடு பயணிக்காதுவிட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஒரு கூட்டமைப்பாக இனிமேல் பயணிப்பது மிகவும் கடினமாகும்.
இதனைப் புரிந்துகொண்டு கூட்டமைப்பை ஜனநாயக பண்புகளுள்ள ஓர் அரசியல் கட்டமைப்பாக மாற்றியமைப்பது தொடர்பில் தமிழ் அரசுக் கட்சி சிந்திக்க வேண்டும்.
பங்காளிக் கட்சிகளோடு பேசவேண்டும் என்னும் தீர்மானம் இவ்வாறானதொரு நல்ல நோக்கம் கொண்டதாக இருப்பின் அதனை வரவேற்கலாம்.
ஆனால், தொடர்ந்தும் தமிழ் அரசு கட்சியின் மேலாதிக்கத்தின் கீழ் மட்டும்தான் கூட்டமைப்பு இருக்க வேண்டுமென்னும் நோக்கத்தோடு இயங்க முற்பட்டால் இறுதியில் கூட்டமைப்பும் வீழ்ந்து, தமிழ் அரசு கட்சியும் வீழ்ந்து போகும் நிலைமையே
ஏற்படும்.