28 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

தமிழ் அரசு கட்சியின் நிலைப்பாடுதான் என்ன?

தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தமிழ்ப் பொது வேட்பாளர் தேவையற்ற விடயம் என்பதில் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் தெளிவாக இருக்கின்றனர் என்றும் – இது இன்னொரு தென்னிலங்கை வேட்பாளரை வெற்றிபெறச் செய்வதற்கான முயற்சி எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். ஆனால், மறுபுறம் அந்தக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புதிய தலைவருக்கான தெரிவில் அதிக வாக்குகளில் வெற்றி பெற்றவரான சிறீதரன் ஆகியோர் தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரித்து வருகின்றனர். உண்மையில், தமிழ் அரசுக் கட்சிக்குள் என்ன நடக்கின்றது? – அது ஒரு கட்சியாக இருக்கின்றதா? – ஒவ்வொரு வரும் ஒவ்வொன்றைப் பேசும் கட்சியாக இருக்கின்றது.

இந்தப் பின்புலத்தில் நோக்கினால் வடக்கு – கிழக்கில் அதிகம் உள்ளுக்குள் பலவீனமாக இருக்கின்ற கட்சியாக தமிழ் அரசுக் கட்சியே இருக்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் தென்னிலங்கையில் இன்னொருவரை வெற்றிபெறச் செய்வதற்கான செயல்பாடு என்றால் – அந்த வேட்பாளர் யார்? அப்படியானால் அந்த வேட்பாளரின் வெற்றிக்குப் பதிலாக தமிழ் அரசுக் கட்சி பிறிதொருவரின் வெற்றியை விரும்புகின்றது என்பதுதானே பொருள்? அவ்வாறாயின், அந்தத் தென்னிலங்கை வேட்பாளர் யார்? தமிழ் அரசு கட்சி ஏன் அதனை வெளிப்படையாக மக்களிடம் கூறும் துணிவற்று இருக்கின்றது? தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பான உரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டபோது ஆரம்பத்தில் இது தென்னிலங்கை இனவாத சக்திகளின் திரைமறைவு வேலைத்திட்டம் என்று சிலர் கூற முற்பட்டனர்.

பின்னர், இது ரணிலுக்கான வேலைத்திட்டம் என்று கூற முயன்றனர் – பின்னர் இது இந்தியாவின் வேலைத்திட்டம் என்று சிலர் கூற முற்பட்டனர். ஆனால், தற்போது இது எவருக்கான வேலைத்திட்டமும் அல்ல, தமிழ்த் தேசிய அரசியலை புதிய அரசியல் சூழலுக்கு ஏற்பப் புடம்போடும் அதேவேளை, தமிழ் மக்களுக்கு ஒரு தேசிய இனப்பிரச்னை இல்லை என்று நிறுவ முற்படும் தென்னிலங்கையின் அரசியல் சமூகத்தின் முயற்சியை தோற்கடிப்பதற்கான ஒரு நகர்வாகவும் இருக்கின்றது. தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை தர்க்கரீதியில் எதிர்க்கும் முயற்சியில் அனைவருமே தோற்றுவிட்டனர்.

தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை நிராகரிப்பதற்கு எந்தவொரு பதிலும் இல்லாமல் சுமந்திரன் அணியினர் தடுமாறிக் கிடக்கின்றனர். இந்த நிலையிலேயே, அந்த அணியின் முக்கியமான ஒருவரான சாணக்கியன் அவதூறுகளை பரப்பிவரும் அதேவேளை, மட்டக்களப்பில் தனது அரசியல் எதிரிகளை விமர்சிப்பதற்காகவும் தமிழ்ப் பொது வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்னும் நோக்கத்துடனும் செயல்பட்டு வருகின்றார்.

மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் என்று சொல்வதுபோன்றுதான் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இன்றைய நிலைமை. கட்சியின் தலைமை மிகவும் பலவீனமாக இருப்பதால் தமிழ் அரசுக் கட்சிக்குள் அதிகமான தலைவர்கள் இருகின்றனர். இதன் விளைவாகத்தான் பல கருத்துகள் வெளிவருகின்றன. ஒரு கட்சிக்குள் இருந்து பல கருத்துகள் வெளிவருவது உண்மையில் ஜனநாயகம் அல்ல மாறாக அராஜகமாகும். அதாவது, கட்சியானது அதிகமான குழப்பவாதிகளால் விழுங்கப்பட்டிருக்கின்றது என்பதுதான் அதன் பொருள் ஒரு காலத்தில் எஸ். ஜே. வி. செல்வநாயகம் தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்றார். ஆனால் இப்போதோ – அவர் உருவாக்கிய கட்சியை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்னும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles