தமிழ் அரசு கட்சி ஏன் தடுமாறுகின்றது?

0
96

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரன் தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்துவரும் ஒருவர். ‘தமிழ்ப்பொது வேட்பாளரை தோற்கடிப்பேன்’ என்று பகிரங்கமாகவே கூறியிருந்தார். இதே போன்று, கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான சீ. வீ. கே. சிவஞானமும் தமிழ்ப்பொது வேட்பாளர் தொடர்பில் தொடர்ந்தும் எதிரான கருத்துகளை வெளியிட்டு வருகின்றார். ஆனால், சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், இது தொடர்பில் எந்தவோர் உறுதியான முடிவையும் எடுக்கவில்லை என்பதுடன் – தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் ஆதரவும் இல்லை.

இதேவேளை எதிர்ப்பும் இல்லை என்னும் அடிப்படையிலேயே தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்றனர். இத்தனைக்கும் தமிழ் அரசுக்கட்சியின் மத்திய குழுவை சேர்ந்த ஒருவரே தமிழ்ப் பொது வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டிருக்கின் றார். அவரிடம் விளக்கம் கோரவுள்ளதாக அறிவித்திருக்கின்றனர். கட்சி ஆதரவும் இல்லை – எதிர்ப்பும் இல்லை என்று கருதும் ஒரு விடயம் தொடர்பில் என்ன விளக்கத்தைக் கோர முடியும்? தமிழ் அரசு கட்சி – குறிப்பாக, சுமந்திரன் அணியினர் தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை உறுதியாக எதிர்ப்பது உண்மையாயின், ஏன் கட்சியால் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாமல் இருக்கின்றது? எதற்காக தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் மதில் மேல் பூனை நிலைப்பாட்டை மேற்கொள்கின்றனர்? தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாடு தவறானது.

அது தமிழ் மக்களுக்கு பாதகமான விளைவுகளையே வழங்கும் என்றால் – எதற்காக பாதகமான ஒரு விடயம் தொடர்பில் தீர்மானத்தை நிறைவேற்ற கட்சி தடுமாறுகின்றது? தமிழ் அரசுக்கட்சி ஒரு ஜனநாயகக் கட்சி – அதனால், பலரிடமும் பல கருத்துகள் இருக்க முடியும். ஆனால், கட்சி இறுதியான முடிவை எடுக்கும் என்றவாறு எவ்வளவு காலத்துக்குச் சொல்லிக் கொண்டிருக்க முடியும்? ஜனநாயகக் கட்சியில் பல கருத்துகள் இருக்க முடியும் – அதனை அந்தக் கட்சிக்குள் இருப்பவர்கள் சகித்துக் கொண்டிருக்க முடியும்.

ஆனால் மக்களுக்கு பாதகமானது என்று ஒரு விடயம் கருதப்படுமானால் அந்த விடயத்தில் எவ்வாறு பலவிதமான கருத்துகள் இருக்க முடியும்? பாதகமான ஓர் அரசியல் விடயம் முன்னெடுக்கப்படுகின்றது என்றால் அதனை கட்சி தடுக்க வேண்டுமல்லவா! தமிழ் அரசுக்கட்சியின் – முக்கியமாக தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை எதிர்க்கும் அணியினர் அச்சமடைந்திருக்கின்றனர். ஒருவேளை மக்கள் பொது வேட்பாளரின் பக்கமாகத் திரும்பிவிட்டால் என்ன செய்வது? அவ்வாறானதொரு சூழலில் சடுதியாக அந்தப் பக்கம் பாயமுடியாது.

எனவே இப்போதே மதில் மேல் பூனையாக இருந்துவிட்டால் நிலைமையை அவதானித்து எந்தப் பக்கம் வேண்டுமனாலும் பாய்ந்து கொள்ளலாம் என்பதே தமிழ் அரசுக்கட்சியின் உண்மையான நிலைப்பாடாகும். இதன் காரணமாகவே தமிழ் அரசுக்கட்சியால் ஓர் உறுதியான முடிவை எடுக்க முடியவில்லை. இனியும் அந்தக் கட்சியால் ஒரு முடிவை எடுக்க முடியாது. ஏனெனில் அந்தளவுக்குக் கட்சி பலவீனமடைந்துவிட்டது. தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிப்பதைத் தவிர வேறு எந்தவொரு தெரிவுகளும் கட்சியிடம் இல்லை.