தமிழ் தேசியத்தின் எதிர்காலம்?

0
91

எஸ். ஜே. வி. செல்வநாயகம் இலங்கை தமிழ் அரசு கட்சியை உருவாக்கியபோது கூறினார் – ‘நான் உங்களுக்கு ஓர் அடையாளத்தை ஏற்படுத்தித் தருவேன்’ அவர் கூறிய அடையாளம் என்பது தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் – அந்தத் தேசிய இனத்தின் தாயகம் வட, கிழக்காகும்.
செல்வநாயகத்தால் போடப்பட்ட அடித்தளத்திலிருந்தே – பின்னர், ஆயுத விடுதலை இயக்கங்கள் உருவாகின.
எந்தவோர் அரசியல் போக்கும் தன்னிச்சையாக எழுச்சி கொள்வதில்லை.
ஓர் அரசியல் போக்கின் தொடர்ச்சியாகவே இயக்கங்கள் தோற்றம் பெறுகின்றன.
அவ்வாறு தோற்றம் பெறும் அமைப்புகள் குறிப்பிட்ட அரசியல் சூழலால் வளர்ச்சியுறுகின்றன – குறிப்பிட்ட சூழ்நிலையை புரிந்து கொள்ளத் தவறுகின்ற அல்லது புதிய சவால்களை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ள மறுக்கின்ற அமைப்புகள் உதிர்ந்துபோக நிலைக்கக்கூடியனவே நிலைக்கின்றன.
எந்தவோர் அரசியல் போக்கும் இந்த அடிப்படையை கொண்டதாகவே இருக்கும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சியே தமிழ் தேசியவாதத்தின் உச்சமாகும்.
விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது தமிழ் அரசு கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஆயுத இயக்கங்கள் போன்ற அனைத்தினதும் எழுச்சியினதும் வீழ்ச்சியினதும் விளைவாகும்.
2009இல் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி தமிழ் தேசியத்தின் உச்சமான எழுச்சியினதும் முடிவாகவே அமைந்தது.
ஏனெனில், விடுதலைப் புலிகள் இயக்கம் போன்ற ஓர் அமைப்பின் வீழ்ச்சியின் பின்னரான அரசியல் போக்கை, அதற்கு நிகரான ஒன்றாக ஒருபோதுமே முன்னெடுக்க முடியாது.
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி மீளவும் தமிழ்த் தேசிய அரசியலுக்கு மிதவாத முகத்தை வழங்கியது.
ஆனால், இந்த இடத்திலிருந்து தமிழ்த் தேசிய அரசியல் வீழ்ச்சி நோக்கிய சாயத் தொடங்கியது.
தொடர்ந்து சரிந்து கொண்டே செல்கின்றது.
சுருங்கக் கூறுவதானால், தமிழ் தேசியத்தின் எதிர்காலம் பெருமளவுக்கு பூச்சியத்தை நோக்கியே செல்வதாக தெரிகின்றது.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் பதவி மட்டக்களப்புக்கு வழங்கப்பட வேண்டும் – அதனை தொடர்ந்தும் நீங்களே வைத்துக் கொண்டிருப்பதை மட்டக்களப்பான் எவரும் செயலாளராக வரக்கூடாதென்று என்னும் எண்ணம் தமிழ் அரசு கட்சியை சேர்ந்த வடக்கு மாகாணத்தவர் சிலரிடம் இருக்கின்றதென்று எண்ணுவதில் தவறில்லை தானே – என்று தமிழ் அரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகின்றார் என்றால், செல்வநாயகம் அவர்கள்
உருவாக்கிய கட்சி எந்த நிலையில் இருக்கின்றது? தமிழ்த் தேசியத்தின் எதிர்காலம் எந்த நிலையிலிருக்கின்றது? ஒப்பீட்டு அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்தின் அத்திபாரமாக இருந்தது.
உள்ளூராட்சி தேர்தலை காரணம் காண்பித்து தமிழ் அரசு கட்சி வெளியேறியதைத் தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயலிழந்தது.
ஒரு தேசியவாத அரசியலின் பலம் என்பது ஒரு கட்டுறுதியான அரசியல் ஸ்தாபனத்தில்தான் தங்கியிருக்கின்றது.
செல்வநாயகம் காலம் தொடக்கம் பிரபாகரன் காலம் வரையில் கட்டுறுதியான தேசிய இயக்கம் ஒன்றே தமிழ்த் தேசிய அரசியலை பாதுகாத்து அடுத்த தலைமுறையிடம் ஒப்படைத்தது.
ஆனால், சம்பந்தன் தலைமை அதனை முறையாக முன்னெடுக்கவில்லை.
ஒருவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
கடந்த 75 வருட கால அரசியலில் இந்தளவுக்கு தமிழ்த் தேசிய அரசியல் பலவீனமாக இருந்ததில்லை.
ஒரு புதிய அரசியல் மாற்றம் ஏற்பட்டு புதியதொரு தலைமை தமிழ்த் தேசிய அரசியலை பொறுப்பேற்றால் மட்டுமே உய்வதற்கு வழியுண்டாகும்.
இல்லாவிட்டால், மெல்லச் சிதைந்து போகும் நிலையிலேயே தமிழ்த் தேசிய அரசியல் இருக்கின்றது.