தமிழ் தேசிய தரப்புக்கள்செய்ய வேண்டியது?

0
125

யுத்தத்திற்கு பின்னரான அரசியல் சூழலில் தமிழ் தேசிய தரப்புக்
கள் மோசமான பிளவுகளை சந்தித்திருக்கின்றன. இப்போதும்
பிளவுகள் தொடர்பிலேயே சிந்திக்க முற்படுகின்றன. 2009இல் யுத்தம்
நிறைவுற்ற போது, தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு
மட்டுமே இருந்தது. ஆனால் இன்று பல கட்சிகளால் தமிழ் தேசிய
அரசியல் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றது.

இந்தச் சூழலை மாற்றியமைக்கும் நோக்கில் கடந்த காலத்தில்
மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எவையும் வெற்றியளிக்கவில்லை.
கட்சிகளை ஒற்றுமைப்படுத்த முற்பட்ட – அதேபோன்று மாற்றுத்
தலைமையொன்றை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள்
அனைத்துமே முளையிலேயே கருகிப் போயிருக்கின்றன. அது
மட்டுமன்றி, மேலும் உடைவுகளுக்கும் வழிவகுத்திருக்கின்றன.
தமிழ் மக்கள் பேரவையின் மூலம் கட்சிகளை ஒன்றுபடுத்தும், பொது
வேலைத்திட்டம் ஒன்றின் கீழ் கொண்டுவருவதற்கான முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இறுதியில் தமிழ் மக்கள் பேரவையின்
நகர்வுகளால் மேலுமோரு புதிய கட்சி உருவாகியது.

பல கட்சிகள் இருப்பது ஜனநாயக அரசியலில் ஓர் அங்கமாக
நோக்கப்பட்டாலும் கூட – உரிமைக்காக போராடிவரும் தமிழ்
இனத்தின் மத்தியில் பல கட்சிகள் இருப்பதானது, உரிமை நோக்கிய
பயணத்தில் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். இவ்வாறான
தொரு சூழலில்தான், இந்தியாவின் தலையீட்டை கோரும் விடயத்தில்
ஆறு கட்சிகள் ஒன்றுபட்டிருந்தன. நீண்ட காலத்திற்கு பின்னர்
இவ்வாறானதொரு உடன்பாடு எட்டப்பட்டிருக்கின்றது. இதனை
எவ்வாறு பேணிப்பாதுகாப்பது என்பது தொடர்பில் மட்டுமே, குறித்த
கட்சிகளின் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.


கடந்த பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பின்னடைவு
களை சந்தித்திருந்தது. இதற்கு கட்சிகள் மத்தியில் ஏற்பட்ட பிளவுகளே
காரணம். இது சரிசெய்ய முடியாத பிரச்னைகளும் அல்ல. இன்று
இந்திய பிரதமருக்கான கடிதத்தில் கையெழுத்திட்டிருக்கும் கட்சிகள்
ஆறாக அடையாளப்படுத்தப்பட்டாலும் கூட, அடிப்படையில் அனை
வருமே கூட்டமைப்பு என்னும் ஒரு குடும்பத்தின் அங்கத்தவர்கள்
தான். கூட்டமைப்பிற்குள் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால், உள்
முரண்பாடுகளால் வெளியேறியவர்கள்தான். எனவே ஆறு கட்சிகளும்
அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்தான்.

இப்போது மீண்டும் ஒரு புள்ளியில் சந்தித்திருக்கின்றனர். இந்த
ஒற்றுமை, இந்த உடன்பாடு, இந்த புரிதல் – பாதுகாக்கப்பட வேண்டும்.
இன்றைய சூழலில் எந்தவொரு கட்சியும் தனித்து எதனையும் சாதிக்க
முடியாது. சேர்ந்து சாதிப்பதிலேயே பல தடைகளும் சவால்களும்
இருக்கின்ற போது, எவ்வாறு இந்த கட்சிகளால் தனித்து விடயங்களை
கையாள முடியும்? தமிழ் மக்களின் நலனை மட்டும் முன்னிறுத்தி
சிந்திக்கும், செயற்படும் அனைவரும் இந்த ஆறு கட்சி கூட்டை
பாதுகாப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நாம் ஒரு
விடயத்தை வலியுறுத்தி வந்திருக்கின்றோம். இது கட்சி – அரசியலுக்
கான காலமல்ல. கட்சிகளின் கூட்டரசியலுக்கான காலம்.