தமிழ் நாட்டின் கச்சதீவுக் கோரிக்கை

0
21

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை வரவுள்ளார். இருநாள் விஜயமாக இலங்கை வரும் மோடி, பாதுகாப்பு விடயங்கள் உள்ளடங்கலாக, சில முக்கிய விடயங்கள் தொடர்பில் உடன்பாடுகளை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார். இந்த நிலையில் தருணம் பார்த்து, கச்சதீவை இலங்கையிலிருந்து மீட்டு எடுக்குமாறு கோரி, தமிழ் நாட்டு சட்டமன்றத்தில் ஏகமனதான தீர்மானம் ஒன்று நிறை வேற்றப்பட்டிருக்கின்றது.இதற்கு தமிழ் நாட்டின் எதிரணியினரான பாரதிய ஜனதா கட்சி மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் முழுமையான ஆதரவை வழங்கியிருக்கின்றன.

இலங்கையில் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ள மோடிக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலேயே இவ்வாறானதொரு தீர்மானத்தை தமிழ் நாடு நிறைவேற்றியிருக்கின்றது.ஆனால், இங்கு கவனிக்கப்பட வேண்டிய பிறிதொரு விடயம் உண்டு – அதாவது, எதிர்காலத்தில் இந்திய – இலங்கை மீனவர் பிரச்னை ஈழத் தமிழ் மக்களின் பிரச்னையை விடவும் முக்கியமான விடயமாக மாறும்.

இப்போதே அவ்வாறான நிலைமை காணப்படுகின்றது ஏனெனில் தமிழ் நாட்டிலிருந்து மீனவர் பிரச்னை தொடர்பில் மட்டும் தான் தற்போது இந்திய மத்திய அரசை நோக்கிக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கை தொடர்பான இந்தியாவின் கரிசனையில் ஈழத் தமிழர் விவகாரம் பிரதான விடயமாக இருந்த காலம் ஒன்றுண்டு.

தமிழ் நாட்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களே அதற்கான பிர தான காரணமாகும். இலங்கை இனப் பிரச்னை விவகாரத்தில் இந்தியா நேரடியாக தலையீடு செய்த காலத்திலும் தமிழ் நாட்டை ஒரு பிரதான காரணமாகக் காண்பித்தே புதுடில்லி அதன் கொள்கையை திட்டமிடப்பட்டது. இலங்கையில் தமிழ் மக்கள் பாதிக்கப்படும் போது ஆறு கோடித் தமிழ் மக்களைக் கொண்டிருக்கும் இந்தியா அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது – என்று கூறியே, அன்றைய இந்தியத் தலையீட்டுக்கான நியாயம் முன்வைக்கப்பட்டது.

ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான விடயங்களில் தமிழ்நாடே இந்தியாவின் காரணமாகவும், தந்திரோபாயமாகவும், திறவுகோலாகவும் இருந்தது. ஆனால், தற்போது அவ்வாறான நிலைமை இல்லை. உண்மையில் ஈழத் தமிழர் விவகாரம் தமிழ் நாட்டில் இப்போது ஒரு பிரதான அரசியல் விவகாரமாகவும் இல்லை, அவ்வாறானதொரு அரசியல் சூழலை ஏற்படுத்தக் கூடிய வல்லமையுடன் ஈழத் தமிழ் அரசியல் சமூகமும் இல்லை.

மோடி இலங்கை வருகின்ற போது, தமிழ் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகள் எவையுமே ஈழத் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை உறுதிப்படுத்தும் விடயத்தில் பிரதமர் தலையீடு செய்யவேண்டும் என்று கோரவில்லை – மாறாக தமிழ் நாட்டு மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர் – இதற்கு கச்சதீவை இலங்கைக்கு வழங்கியதே பிரதான காரணம் – எனவே அதனை மீளவும் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்னும் கோரிக்கையே பிரதான அரசியல் கோஷமாக மாறியிருக்கின்றது.

ஈழத் தமிழர் அரசியலுக்கு தலைமை தாங்குவதாகக் கூறிக்கொள்ளும் நபர்கள் ஆளுமையுடன் அரசியலை முன்னெடுக்காவிட்டால் இலங்கை – இந்திய மீனவர் பிரச்னை மட்டுமே இந்தியாவின் பிரதான கரிசனைக்குரிய விடயமாக இருக்கும்.