தமிழ் மக்களிடம் வாக்களிக்கக் கோருவது?

0
7

இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் தங்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தாங்கள் மட்டுமே சரியானவர்கள் – தங்களுக்கு மட்டுமே வாக்களியுங்கள் என்று கோருவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

தேர்தல் அரசியலில் ஒவ்வொருவரும் தங்களை நியாயப்படுத்துவதும் மற்றவர்களை நிராகரியுங்கள் என்று கூறுவதும் வழமையான அரசியல் சங்கதிகள்தான். ஆனால், நடைபெறவுள்ள தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி அனைத்து வட்டாரங்களையும் வென்றாலும்கூட, ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்ற முடியாது. இலங்கை தமிழ் அரசு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருக்கின்ற போதுகூட, உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற இடங்கள் சிலவற்றை காலப் போக்கில் பாதுகாக்க முடியாத நிலைமையே ஏற்பட்டது.

இந்தப் பின்புலத்தில் நோக்கினால் இப்போது நிலைமை முன்னரையும் விடவும் மோசமாக இருக்கின்றது. தற்போதைய சூழலில் தமிழ்த் தேசிய கட்சிகள் பல அணிகளாக போட்டியிடுகின்றன. ஒவ்வோர் அணியும் தாங்கள் மட்டுமே சரியானவர்கள் என்றும் கூற முற்படுகின்றனர். இதேவேளை, இம்முறை புதியதொரு சவாலையும் தமிழ் கட்சிகள் எதிர்கொண்டிருக்கின்றன. அதாவது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சவால்.

தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து விடாதீர்கள், அவ்வாறு வாக்களித்தால் அவர்கள் தமிழ்த் தேசிய இனப்பிரச்னை என்று ஒன்றில்லை என்று பிரசாரம் செய்வார்கள், அதனை நாம் தோற்கடிக்க வேண்டும் – என்பதே தமிழ்த் தேசிய கட்சிகளின் பிரதான
கோஷமாக இருக்கிறது. இவ்வாறான நிலைமை முன்னைய தேர்தல்களின் போது இருந்ததில்லை. ஒரு கட்சி மக்களுக்கு நெருக்கமாக இருந்து பணியாற்றினால் மக்களிடம் அதிகம் கூற வேண்டியதில்லை.

நிலைமைகளை புரிந்து கொண்டு, தங்களின் கடமையை உணர்ந்து மக்களே வாக்களிப்பார்கள். மக்களிடம் கெஞ்சும் நிலைமை ஏன் ஏற்படுகிறது என்றால் கட்சிகள் முறையாக மக்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்பதுதான் அதன் பொருள். இலங்கை தமிழ் அரசு கட்சியை பொறுத்தவரையில் மக்கள் பழக்க தோசத்தில் தங்களுடைய சின்னத்துக்குத்தான் வாக்களிப்பார்கள் என்னும் நம்பிக்கை மட்டுமே, அரசியல் முதலீடாகக் கொண்டிருக்கிறது. இலங்கை தமிழ் அரசு கட்சிக்கு மக்கள் வாக்களிப்பதே ஆச்சரியமானது.

ஏனெனில், கடந்த 75 வருடங்களாக அந்தக் கட்சி கூறிய விடயங்களில் எதனையுமே அடைய முடியவில்லை. ஒரு தோல்வியடைந்த கட்சியாகவே தமிழ் அரசு கட்சி ஒவ்வொரு தேர்தலையும் எதிர்கொள்கிறது. எனினும், பழக்கப்பட்ட கட்சி, தெரிந்த சின்னம் என்னும் நிலையில் கணிசமான மக்கள் வாக்களிக்கின்றனர் – குறிப்பாக பழைய தலைமுறையை சேர்ந்தவர்கள் பிறிதொரு தெரிவை நோக்கிச் செல்ல விரும்பாத காரணத்தால், தமிழ் அரசு கட்சிக்கே வாக்களிக்கின்றனர்.

இதன் காரணமாகவே தங்களை ஒரு பிரதான கட்சியென்று கூறிக்கொள்ளும் தகுதியை தமிழ் அரசு கட்சி பெற்றுக் கொண்டிருக்கிறது. ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளும் தாங்கள் முன்வைத்த விடயங்களில் எதனையும் வெற்றிகொள்ளவில்லை. வெறுமனே அறிக்கைகளை வெளியிடுபவர்களாகவே இருக்கின்றனர். உள்ளூராட்சி தேர்தல் பிரசாரங்களில் தமிழ் கட்சிகள் முன்வைக்கும் எந்தவொரு விடயத்தையும் இந்தக் கட்சிகளால் சாத்தியப்படுத்த முடியாது. அதற்கான வல்லமையும் எந்தவொரு தமிழ் கட்சியிடமும் இல்லை என்பதே உண்மையாகும். எனினும், தமிழ் மக்கள் அவர்களுடைய பொறுப்பை உணர்ந்து வாக்களிக்க வேண்டியது அவர்களுடைய கடமையாகும்.