-அலசுவது இராஜதந்திரி-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாவதற்கு இன்னும் ஓரிரு வாரங்களே இருக்கின்றன. இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி சர்வதேச சமூகத்துக்கு இலங்கையின் வடக்கு-கிழக்கு மக்கள் மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதிலும் தொடர்ந்து தமது அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றவும், மனிதாபிமானப் பிரச்னைகளை தீர்க்கவும் போராடிவருவதையே எடுத்தியம்புவதாக விளங்கியிருந்தது.
இருந்தபோதிலும், ‘வெண்ணை திரண்டு வரும் போது தாளியை உடைப்பது’ போன்ற விஷமத்தனங்களே பொத்துவிலில் இருந்து வந்த பேரணி பொலிகண்டியை நெருங்கியபோது இடம்பெற்றிருந்தன.
பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையிலான பேரணி இலங்கையின் ஆட்சியாளர்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், இந்தியாவுக்கும் வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் பூர்வீக பிரதேசங்கள் என்ற செய்தியை வரையறை செய்துள்ளதை ஒரு பரந்த கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டுமே தவிர, ‘கோழி முதலில் வந்திருந்ததா? அல்லது முட்டை முதலில் வந்திருந்ததா?’ என்ற வகையில் ‘விதண்டா வாதத்தை’ மேற்கொள்வது வெற்றிகரமாக நடந்து முடிந்த பேரணியை கொச்சைப்படுத்துவதாகவே அமையும்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியை முன்னின்று வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வழங்கிய பங்களிப்பு அபரிமிதமானது.
மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை
இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின்போது மகாத்மா காந்தி பல யாத்திரைகளை கால் நடையாகவும், ரயில் வண்டிகள் மூலமாகவும் இந்தியாவில் மேற்கொண்டிருந்தார்.
மகாத்மா காந்தி மேற்கோண்ட பிரிட்டிஷாருக்கு எதிரான யாத்திரைகளில் அஹமதாபாத்திலுள்ள அவரது சபர்மதி ஆச்சிரமத்திலிருந்து 240 மைல்கள் தூரம் கால் நடையாக தண்டி என்றழைக்கப்படுகின்ற(Dandi) இந்தியாவின் மேற்கிலுள்ள அராபிய கடற் கரையை நோக்கி பிரிட்டிஷார் விதித்த உப்பு வரிக்கு எதிராக தண்டி யாத்திரையை நடத்தியிருந்தார். இப் பாதயாத்திரை உப்பு சத்தியாக்கிரக யாத்திரை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இப் பாதயாத்திரையே உலகில் சுதந்திர போராட்டத்துக்காக நடத்தப்பட்ட மிக நீண்ட யாத்திரையாக கணிக்கப்பட்டிருந்தது. 1930ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் திகதி தொடங்கி அதே ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிவரை மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாக்கிரக தண்டி யாத்திரை 91 வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்டிருந்தது.
ஆனால் கால் நடையாகவும் , வாகனப் பேரணியாகவும் இந்தியாவின் தண்டி யாத்திரக்குப்பின்னர், 250 கிலோ மீட்டர் தூரத்தை இலங்கையின் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி சாத்வீகமான முறையில் அடைந்திருந்தது.
ஏமாற்றங்களை தழுவும் தமிழ் மக்கள்
எனவே, வடக்கு-கிழக்கில் ஒரு சாத்வீக போராட்டம் எழுச்சி பெற ஆரம்பித்துள்ளது எனப்பெருமைப்படுவதை விட, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டில், பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். எ. சுமந்திரன் பொத்துவில் முதல் பொலிகண்டிவரை நடத்தப்பட்ட பேரணி குறித்து தெரிவித்தவற்றின் மூலம், தமிழ் மக்களுக்கு எம். எ. சுமந்திரன் துரோகமிழைத்துவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பாட்டனாரான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் காலத்திலிருந்து இன்று வரை தமிழ் அரசியலில் மிதவாதிகள் மத்தியில் மட்டுமல்ல, ஆயுதப்போராட்டத்தை மேற்கொண்ட தீவரவாதிகள் மத்தியில்கூட இவர்களின் ஒற்றுமையான – ஒருமித்த போக்கு ஒருபோதும் காணப்பட்டிருக்கவில்லை.
இதன்காரணமாக, தமிழ் மிதவாத அரசியல் வாதிகளாலும், தீவிரவாத ஆயுதப் போராளிகளின் தவறான அரசியல் அணுமுறைகளாலும் அழிவுகளையும், அவலங்களையும் அனுபவித்து, இறுதியில் ஏமாற்றங்களையும் சந்தித்தவர்களாகவே வடக்கு-கிழக்கின் தமிழ் பேசும் மக்கள் காணப்படுகின்றனர்.
எனவே, ஜெனிவா மனித உரிமைப்பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் ஓரிரு வாரங்களே இருக்கின்ற நிலையில், ஒரு மாதத்துக்கு முன்னர் வவுனியா குருமண்காட்டில் தமிழ் அரசியல் கட்சிகளிடையே ஜெனிவா கூட்டத்தொடர் தொடர்பாக எட்டப்பட்ட ஒற்றுமையான போக்கையும் புறந்தள்ளி, மீளவும் தமிழ் அரசியல் தரப்பில் ஒரு சாராரை மறுசாரார் விமர்சிக்க ஆரம்பித்திருப்பதை நோக்கும் போது, பிரபல அரசியல் தத்துவஞானி வோல்டயர் (Voltaire) கூறியிருப்பதே வடக்கு-கிழக்கு தமிழ் மக்களைப்பொறுத்தவரை மிகப்பொருத்தமானதாக இருக்கின்றது.
வோல்டயர் கூறியது இதுதான்: ‘நூற்றுக்கணக்கான எலிகளால் ஆளப்படுவதைவிட, ஒரு நல்ல சிங்கத்தினால் ஆளப்படுவதை மிகவும் விரும்புவேன். (“I would rather obey a fine lion much stronger than myself than hundreds of rats of my own species”).