திருகோணமலை ஒருகாலத்தில் ஈழத் தமிழர்களின் தலைநகரமாக பிரகடனம் செய்யப்பட்ட இடமாகும்.
இந்தப் பின்புலத்தில்தான் இணைந்த வடக்கு – கிழக்கு மாகாண அரசாங்கத்தின் தலைமைப் பணிமனை திருகோணமலையில் இயங்கியது.
மிதவாத தலைமைகளும் – அனைத்து இயக்கங்களும் திருகோணமலைதான் தமிழ் மக்களின் தலைநகரென்று பிரகடனம் செய்தன.
ஆனால், திருகோணமலையின் இன்றைய நிலை? திருகோணமலையை தமிழ் மக்களின் தலைநகராகக் கருதியதற்கு பின்னால் ஒரு முக்கியமான காரணமிருந்தது.
அதாவது, திருகோணமலையின் மூலோபாய முக்கியத்துவம்.
திருகோணமலை உலகின் சிறப்பான இயற்கை துறைமுகங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது திருகோணமலை பிரித்தானியர்களின் முக்கிய கடற்படை தளங்களில் ஒன்றாக இருந்தது.
இந்தப் பின்புலத்தில் திருகோணமலை இந்து சமுத்திர பிராந்தியத்தின் தவிர்க்கமுடியாத மூலோபாய சொத்தாகக் கருதப்பட்டது.
இந்தப் பின்புலத்தில்தான் திருகோணமலையை தமிழ் மக்களின் தலைநகராக அனைத்து இயக்கங்களும் பிரகடனம் செய்தன.
இதன் மூலம் தமிழர்கள் அதிகாரத்தை கைப்பற்றினால் திருகோணமலையின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி பேரம்பேச முடியுமென்று தமிழ் அரசியல் சமூகம் கருதியது.
உலகம் அமெரிக்க – சோவியத் பனிப் போருக்குள் சிக்குப்பட்டிருந்த காலத்தில் திருகோணமலை துறைமுகம் தொடர்பில் இந்தியாவின் கரிசனை அதிகரித்தது.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் ஜே.ஆர்.ஜெயவர்த்தன முற்றிலும் மேற்கு சார்பான கொள்கை நிலைப்பாட்டைக் கையிலெடுத்தார்.
1977இல் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஜெயவர்த்தன அமெரிக்காவுடன் நெருங்கிச் செயல்படுவதற்கான திட்டங்களை வகுத்தார்.
அன்றைய சூழலில், இந்தியா சோவியத் முகாமுடன் இணைந்திருந்தது.
இந்தப் பின்புலத்தில் இந்திராகாந்தி தலைமையிலான இந்தியா கடும் அதிருப்தியுற்றது.
இந்தியாவின் அதிருப்திக்கான காரணிகளில் திருகோணமலை துறைமுகமும் ஒன்று.
அன்றைய சூழலில், ஜெயவர்த்தன திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்கக் கடற்படையினரின் பயன்பாட்டுக்கு வழங்கப்போவதான அச்சம் ஒன்று இந்திய மட்டத்தில் உணரப்பட்டது.
இத்துடன், வேறு காரணிகளும் இருந்தன.
திருகோணமலை துறைமுகம் தொடர்பில் இந்திய மட்டத்தில் நிலவிய அச்சத்தின் காரணமாகவே இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் இந்த விடயம் உள்ளடக்கப்பட்டது.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி திருகோணமலை துறைமுகத்தை இராணுவ பயன்பாடுகளுக்காக எந்தவொரு வெளிநாட்டு தரப்புக்கும் அனுமதிக்கக்கூடாதென்னும் உடன்பாடு உண்டு.
இதேவேளை, திருகோணமலையின் மீது இந்தியா பிரத்தியேக ஈடுபாட்டையும் கொண்டிருக்கின்றது.
திருகோணமலையில் எதிர்காலத்தில் மிகப்பெரிய திட்டங்களையும் இந்தியா முன்னெடுக்கலாம்.
அதேவேளை, இந்தியாவுக்கும் திருகோணமலைக்கும் இடையில் எண்ணெய் குழாய் நிர்மாணிக்கும் திட்டம் ஒன்றும் ஆராயப்படுகின்றது.
இவை அனைத்தும் திருகோணமலையின் முக்கியத்துவத்துக்கு எடுத்துக்காட்டு.
ஆனால், மறுபுறம் இந்தளவு முக்கியமான திருகோணமலையில் தமிழர் அரசியல் எவ்வாறு உள்ளது? திருகோணமலையின் தமிழ் அரசியல் குரல் மிகவும் பலவீனமாக இருக்கின்றது.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் தனது சார்பில் கூட்டங்களில் பங்குகொள்வதற்காக பிறிதொரு பிரதிநிதியை நியமித்திருக்கின்றார்.
இன்றைய சூழலில், திருகோணமலை தமிழ் மக்களின் தலைநகரம் என்னும் கதையெல்லாம் முடிந்துவிட்டது. – ஆகக் குறைந்தது, தமிழ் மக்கள் வாழும் ஒரு மாவட்டம் என்னும் வகையில்தான் விடயங்களை நோக்கவேண்டும்.
அந்தப் பின்புலத்தில்கூட, திருகோணமலை தமிழ் மக்கள் தலைமையற்ற அரசியல் குரலற்ற மக்களாகவே இருக்கின்றனர்.