வாரிசு திரைப்பட வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். தளபதி 67 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அத்துடன், கத்தி, மாஸ்டர் படங்களை தொடர்ந்து அனிருந்த் மூன்றாவது முறையாக இப்படத்தின் ஊடாக விஜய் படத்திற்கு இசையமைக் கவுள்ளார்.
மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தநிலையில், தளபதி 67 படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, இத்திரைப்படத்திற்கு லியோ என பெயரிட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும், லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் திகதி வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.
இத்திரைப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பொலிவூட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மலையாள நடிகர் மெத்யூ தோமஸ் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
அத்துடன், தளபதி 67 படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. இதற்கிடையில், தளபதி 67 படத்தின் பூஜை நிகழ்வுகள் இடம்பெற்ற காணொளியையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில், நடிகர் விஜய், திரிஷா, அர்ஜுன்,பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர் மிஸ்கின், சாண்டி ஆகியோர் கலந்துக்கொண்டதனை காணக்கூடியதாய் உள்ளது.