மீளவும் பழைய கதையொன்று நினைவுபடுத்தப்பட்டிருக்கின்றது.
சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் கொள்கைசார் உதவி செயலாளர் ஜெடிடியா பி. றோயல் ) கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையில் படைத்தளமொன்றை நிறுவப் போவதான கதைகளை சிங்கள ஊடகங்கள்
பரப்பி வருகின்றன.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான கீழ்நிலை உதவிச் செயலாளர் விக்ரோறியா நூலண்ட் கொழும்பிற்கு விஜயம் செய்து திரும்பியதைத் தொடர்ந்து இவ்வாறானதொரு கதையை ஆங்கில இணையத்தளமொன்றே முதன்முதலாக வெளியிட்டிருந்தது.
வழமையாக அமெரிக்க படைத்தளம் என்று கூறப்படும் இடத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து படைத்தளமொன்றை நிறுவப்போவதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
சந்திப்பில் ஈடுபட்ட பாதுகாப்பு விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தென்னக்கோன், அமெரிக்க பாதுகாப்பு உயர் அதிகாரி அவ்வாறான நோக்கில் உரையாடவில்லையென்றும் இவ்வாறான செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் தெரிவித்திருக்கின்றார்.
திருகோணமலையில் அமெரிக்கா படைத்தளமொன்றை நிறுவ முற்படுவதான செய்திகள் புதியவையல்ல.
மிகவும் பழையவை.
தென்னிலங்கையின் அமெரிக்க எதிர்ப்பு அரசியல்வாதிகள் அவ்வப்போது கூறிவரும் ஒரு கதைதான்.
உலகம் அமெரிக்க – சோவியத் பனிப்போருக்குள் சிக்குண்டிருந்த காலத்திலும் இவ்வாறானதொரு பார்வை மேலோங்கியிருந்தது.
அமெரிக்கா திருகோணமலையின் மீது கண்வைத்திருப்பதான பார்வையொன்று இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் மத்தியிலும் மேலோங்கியிருந்தது.
1977இல் அதிகாரத்தை கைப்பற்றிய ஜே. ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் மேற்குலக சார்பான கொள்கையை முன்னெடுக்க முயற்சித்தது.
இந்த நகர்வுகள் இந்திரா காந்தி தலைமையிலான இந்தியாவிற்கு அதிருப்திகளை ஏற்படுத்தியிருந்தது.
குறிப்பாக அமெரிக்க குரல் நிறுவனத்திற்கு இலங்கைக்குள் இடமளித்தமை, அமெரிக்க தூதரகத்தில் இஸ்ரேலிய நலன்பிரிவிற்கு அனுமதியளித்தமை மற்றும் திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்க கடற்படை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் ஜே.ஆர். அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்பட்டது.
ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் நகர்வுகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுக்கின்றது என்னும் கண்ணோட்டமே அன்று மேலோங்கியிருந்தது.
ஏனெனில், அப்போது இந்தியா சோவியத் யூனியன் செல்வாக்கு வளையத்திற்குள் இணைந்திருந்தது.
அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவு வழங்கிவந்த நிலையில் பாகிஸ்தானை உடைப்பதற்கு இந்தியாவிற்கு சோவியத்தின் ஆதரவு தேவைப்பட்டது.
ஆனால், இன்று நிலைமைகள் ஓர் எல்லைக்குள் முடக்கும் அமெரிக்க மூலோபயத்தில் இந்தியாவே பிரதான பங்காளியாக இருக்கின்றது.
இந்த நிலையில்தான் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து இலங்கையின் மூலோபாய விடயங்களை கையாள முற்படுவதான செய்திகள் சாதாரணமாக வெளிவருகின்றன.
இலங்கை தொடர்பான அமெரிக்க நகர்வுகளில் இந்தியாவின் ஆலோசனையின்றி எதுவும் நடக்காதென்பது உண்மைதான்.
ஆனால், படைத்தளமொன்றை நிறுவப்போவதான கதைகள் மிகைப்படுத்தப்பட்டனவாகவே இருக்கின்றன.
இன்றைய நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில், குறிப்பிட்ட இடத்தில் பிரமாண்டமான படைத்தளமொன்றை நிறுவித்தான் அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்க வேண்டுமென்னும் நிலைமையில்லை.