திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவின் இருதயபுரம் பகுதியில் உள்ள தென்னைமரத் தோட்டமொன்றிலிருந்து இன்று காலை ஆணொருவரின்
சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் பட்டித்திடல் -தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய கந்தவனம் சசிகுமார் என தெரியவருகின்றது. சடலமாக மீட்கப்பட்ட நபர், மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள -களுதாவளை பகுதியில் 43 வயதுடைய மனைவியை கொலை செய்த சந்தேகத்தின் பெயரில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவர் என தெரியவருகின்றது.
கொலை குற்றச்சாட்டில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் களுதாவளையிலிருந்து தப்பித்து மூதூரில் தலைமறைவாக இருந்த நிலையில்
இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு திருகோணமலை தடயவியல் பிரிவு பொலிஸார் வருகை தந்து, விசாரணைகளை முன்னெடுத்தனர்.
மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகைதந்து சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு மூதூர் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.