பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட உகாண்டா நாட்டை சேர்ந்த 33 வயதான ஒலிம்பிக்ஸ் மரத்தான் வீராங்கனையின் உடல் இராணுவ மரியாதையுடன் ஆயிரக்கணக்கான மக்களின் அஞ்சலிக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது.
உகாண்டா நாட்டை சேர்ந்த 33 வயதான ஒலிம்பிக்ஸ் மரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ரெபேக்கா செப்டேகி மீது அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடைசியாக உகாண்டா சார்பில் பாரிஸ் ஒலிம்பிக்சில் கலந்துகொண்டு மரத்தான் பிரிவில் 44வது இடத்தைப் பிடித்து நாடு திரும்பிய ரெபேக்கா கென்யா நாட்டில் மேற்கு மாகாணத்தில் அவருக்கு சொந்தமான வீட்டில் ஓய்வில் இருந்தார்.
வீட்டில் வைத்து ரெபேக்காவுக்கும் அவரது முன்னாள் காதலன் டேனியலுக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்துள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ரெபேக்கா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார் டேனியல். இதனால் அவருக்கு 80 சதவீத தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ரெபேக்கா உடல் உறுப்புக்கள் செயலிழப்பு காரணமாக கடந்த 5ஆம் திகதி உயிரிழந்தார்.
இந்நிலையில் வீராங்கனை ரெபேக்காவின் உடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை கென்யாவில் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கென்ய நாட்டின் எல்லையில் உள்ள நகரத்தில் நடந்த இந்த இறுதி ஊர்வலத்தில் உகாண்டாவை சேர்ந்த ஆயிரக்கணக்காக மக்கள் ரெபேக்காவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே ரேபாகாவின் காதலனிடம் பொலிஸ் விசாரணை நடத்தி வருகிறது.