முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி அளித்த பொது மன்னிப்பை இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம். அத்துடன், அவரைக் கைது செய்து மறியலில் வைக்கவும் இன்று செவ்வாய்க்கிழமை கட்டளை பிறப்பித்தது.
ஹிருணிகா பிறேமச்சந்திர, அவரின் தாயார் சுமணா பிறேமச்சந்திர ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மனுக்கள் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டன. நீதியரசர்கள், பி. பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட, அச்சல வெங்கம்புலி ஆகியோர் தலைமையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போதே, துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி அளித்த பொது மன்னிப்பை இடைநிறுத்தி நீதியரசர்கள் உத்தரவிட்டனர். துமிந்த சில்வா வெளிநாடு செல்வதற்கும் தடை விதித்த நீதிமன்றம், அவரின் கடவுச் சீட்டை பறிமுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்குமாறும் பணிப்பு விடுத்தனர்.
தவிர, துமிந்த சில்வாவை கைது செய்து மறியலில் வைக்கவும் இந்த நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்னெடுப்பதற்கு தேவையான உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்கவும் சட்டமா அதிபருக்கு கட்டளையிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், ஹிருணிகா பிறேமச்சந்திர சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரனும் சுமணா பிறேமச்சந்திர சார்பில் சட்டத்தரணி எராஜ் டி சில்வாவும் முன்னிலையாகினர்.
மேலும், இந்த வழக்கு விசாரணையைஎதிர்வரும் செப்ரெம்பர் முதலாம் திகதிக்கும் ஒத்திவைத்தனர்.
2011ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிறேமசந்திர உட்பட நால்வர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் 2018ஆம் ஆண்டு துமிந்த சில்வா குற்றவாளியாக இனங்காணப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் துமிந்த சில்வா பொது மன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதியால் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.