

துருக்கி நாட்டின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் துருக்கி மற்றும் சிரியாவைச் சேர்ந்த 200 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தில், அதிக அளவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து பெருமளவான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலநடுக்கத்தில் இடிந்த கட்டடங்களுக்கு அடியில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு உயரும் என்று அச்சப்படுகிறது. இந்த நில அதிர்வு சைப்ரஸ், லெபனான் உள்ளிட்ட சில நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் துருக்கியில் வசிக்கும் இலங்கையர் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.