துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பம் நிகழ்ந்து நேற்று ஒரு வாரத்தை எட்டிய நிலையிலும் மேலும் சிலர் கட்டட இடிபாடுகளில் இருந்து உயிரிருடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
எனினும் மனித உடல் குடிநீர் இன்றி உயிர் பிழைக்க முடியுமான காலத்தின் உச்ச கட்டத்தை எட்டும் நிலையில் இடிபாடுகளில் சிக்கி உயிர் பிழைத்தவர்களை மீட்பதற்கான வாய்ப்பு குறைந்துள்ளது. குறிப்பாக உறைபனி வெப்பநிலை நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது.
தென்கிழக்கு துருக்கி மற்றும் வட சிரியாவில் கடந்த பெப்ரவரி 6ஆம் திகதி ஒன்பது மணி நேர இடைவெளியில் 7.8 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் இடம்பெற்ற இரு பூகம்பங்களில் கொல்லப்பட்டவர்கள் எணிக்கை 36,000ஐ தாண்டியுள்ளது. எனினும் தொடர்ந்து மீட்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
எனினும் ஏழு நாட்கள் இடிபாடுகளில் சிக்கிய நிலையில் அதிசயமாக சிறுவன் ஒருவனும் 62 வயது பெண் ஒருவரும் நேற்று மீட்கப்பட்டனர்.
இதில் ஏழு வயதான சிறுவன் தென் கிழக்கு துருக்கியின் ஹடாய் மாகாணத்தில் இருந்து மீட்கப்பட்டதோடு நபீசே யில்மாஸ் என்ற பெண் நுர்டாகி பகுதியில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த இருவரும் 168 மணி நேரத்துக்கு மேல் இடிபாடுகளில் சிக்கி இருந்துள்ளனர்.
அதேபோன்று இஸ்லாஹியே நகரில் இருக்கும் இடிந்த ஐந்து மாடிக் கட்டடத்தில் இருந்து 40 வயது பெண் ஒருவர் நேற்று உயிருடன் வெளியே கொண்டுவரப்பட்டுள்ளார். சுமார் 170 மணி நேரம் இடிபாடுகளில் சிக்கி இருந்த சிபெல் கயா என்ற அந்தப் பெண்ணை காப்பாற்ற துருக்கி நிலக்கரி சுரங்க மீட்புக் குழு ஒன்றும் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலையில் மக்களை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைந்து காணப்படுவதாக மெக்சிகோ பல்கலைக்கழக பேராசிரியர் எடுவார்டோ ரினோசோ அங்குலோ குறிப்பிட்டுள்ளார். இவர் பூகம்பத்தால் கட்டட இடிபாடுகளில் சிக்கி ஏற்படும் உயிரிழப்புகள் பற்றி 2017இல் ஆய்வு ஒன்றை மேற்கொண்டவராவார்.
இடிபாடுகளில் இருந்து ஐந்து நாட்களின் பின் மீட்கப்படுவது வியப்புக்குரியது என்றும் அது ஒன்பது நாட்களின் பின் சில விதிவிலக்குகள் தவிர்த்து பூஜ்ய நிலையிலேயே இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை உறுதி செய்த லண்டன் பல்கலை கல்லூரியின் அவசர திட்டமிடல் மற்றும் முகாமைத்துவ பேராசிரியர் டேவிட் அலெக்சாண்டர், இடிபாடுகளில் இருந்து மக்களை உயிருடன் மீட்பதற்கான வாயில் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றார்.
எனினும் பல கட்டடங்களும் மோசமாக நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவை சிறு சிறு துண்டுகளாக சரிந்து ஆட்கள் உயிர் தப்புவதற்கு போதிய இடைவெளி ஏற்பட்டிருக்கும் நிலையில் சற்று நம்பிக்கை இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மறுபுறம் பூகம்பம் நிகழ்ந்து ஒரு வாரம் கடந்திருக்கும் நிலையிலும் பாதிக்கப்பட்ட பலரும் தற்காலிக முகாம்கள் இன்றி வீதிகளில் தங்கி வருகின்றனர். சிலர் இடிந்த தமது வீட்டுக்கு முன்னால் இடிபாடுகளில் சிக்கிய உறவினர்களை மீட்பதற்கு போராடி வருகின்றனர்.
இந்த பெரும் அழிவுக்கு கட்டட நிர்மாணத்தின் மீது பெரும்பாலான மக்கள் குறைகூறி வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பில் கட்டட ஒப்பந்ததாரர்களை இலக்கு வைத்து துருக்கி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பூகம்பத்திற்கு ஈடுகொடுக்கத் தவறிய கட்டடங்கள் தொடர்பில் குறைந்தது 131 பேர் மீது அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளர்.
துருக்கியில் பூகம்பம் மற்றும் பொறியியல் தரத்தை பூர்த்தி செய்யும் வகையில் நிர்மாண ஒழுங்குமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டபோதும் அது மிக அரிதாகவே செயற்படுத்தப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
துருக்கி மாராஸ் நகரில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் ஒரே இடத்தில் 5 ஆயிரம் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. இதற்காக இராட்சத எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு இறுதி சடங்குகள் நடந்தன. உடல்கள் வாகனங்களின் மூலம் அந்த இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. சில உடல்கள் அடையாளம் காணப்படாமலேயே அடக்கம் செய்யப்பட்டன. இதேநேரம் சிரியாவில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் உலகம் தோல்வி அடைந்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவாகரங்களுக்கான தலைவர் மார்டின் கிரிப்பித் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் ஒரு தசாப்தத்திற்கு மேலாக நீடிக்கும் உள்நாட்டுப் போர் நாட்டின் சுகாதார கட்டமைப்பை சீர் குலைத்திருப்பதோடு நாட்டின் ஒரு பகுதி தொடர்ந்தும் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த பூகம்பத்தினால் சிரியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,500ஐ தாண்டியுள்ளது.