ஜோர்தானில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் துப்பாக்கிதாரி உயிரிழந்ததுடன் மூன்று காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக ஜோர்தான் பாதுகாப்பு தரப்பினர் செய்தி வெளியிட்டுள்ளனர்.
தலைநகர் அம்மானின் ரபியா பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதலை மேற்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.காவல்துறையினர் உடனடியாக செயல்பட்டு பதில் தாக்குதலை மேற்கொண்டு துப்பாக்கிதாரி ஒருவரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தை அடுத்து இஸ்ரேலிய தூதரகத்திற்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் இஸ்ரேலுக்கு எதிராக அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. காசாவில் நடைபெற்ற போரில் இஸ்ரேலுக்கு எதிரான உணர்வு அதிகமாக இருப்பதனால் பிராந்தியம் முழுவதும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெற்று வருகின்றன.ஏனைய துப்பாக்கிதாரிகளை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில் குடியிருப்பாளர்களை வீடுகளில் இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.