தென்கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் மீண்டும் புதிய தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.
தென்கொரியாவில் கடந்த 3ஆம் திகதி ஜனாதிபதி யூன் சுக் இயோல் திடீரென இராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.
இது தொடர்பில் தொலைக்காட்சியில் உரையாற்றிய யூன் சுக் இயோல், வடகொரிய கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல் காரணமாக தென் கொரியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பின்னர் மக்களின் கடும் எதிர்ப்பால் அவசர நிலையை தென்கொரிய ஜனாதிபதி வாபஸ் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து தென்கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தன.
ஆனால், அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஆளுங்கட்சியினர் புறக்கணித்ததால், தீர்மானம் தோல்வியடைந்தது.
இந்த நிலையில், தென்கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்ய அந்த நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மற்றும் 5 சிறிய கட்சிகள் இணைந்து மீண்டும் புதிய தீர்மானத்தை தாக்கல் செய்தன.
இந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.