தென்னாபிரிக்கவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 28 ஓட்டங்களினால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது தென்னாபிரிக்காவுடன் மூன்று ஒருநாள் மற்றும் நான்கு டி-20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.
முதலில் ஆரம்பமாகிய ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றது. அதன் பின்னர் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா 17 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இந் நிலையில் தொடர் யாருக்கு என்ப்தை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி நேற்றைய தினம் செஞ்சுரியனில் ஆரம்பமானது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை பாகிஸ்தானுக்கு வழங்கியது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 320 ஓட்டங்களை குவித்தது.
அணி சார்பில் அதிகபடியாக ஃபக்கர் ஜமான் 104 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கலாக 101 ஓட்டங்களையும், பாபர் அசாம் 82 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கலாக 94 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் கேசவ் மகாராஜ் 3 விக்கெட்டுகளையும், ஐடன் மார்க்ராம் 2 விக்கெட்டுகளையும், பெஹ்லுக்வயோ மற்றும் ஸ்மட்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
321 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இதன் மூலம் 28 ஓட்டங்களினால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் 2:1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
போட்டியின் ஆட்டநாயகனாக பாபர் அசாமும், தொடரின் நாயகனாக ஃபக்கர் ஜமானும் தெரிவானார்கள்.