தென் கொரிய முன்னாள் அதிபர் மூன் ஜே-இன் மீது லஞ்ச புகார்

0
34

தென் கொரியா முன்னாள் அதிபர் மூன் ஜே- இன் ஆட்சியில் இருந்த போது, விமான நிறுவனம் ஒன்றிடமிருந்து தன் மருமகன் வாயிலாக 1.2 கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றதாக அந்நாட்டு அரசு வழக்கு பதிந்துள்ளது.

கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில் 2017 — 2022 வரை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மூன் ஜே இன் அதிபராக இருந்தார். தற்போது மக்கள் சக்தி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அதிபராக யூன் சுக் யோல் பதவி வகிக்கிறார்.

இங்கு பல முன்னாள் அதிபர்கள் பதவி முடியும் சமயத்தில் அல்லது பதவி விலகிய பின் ஊழல் வழக்குகளை எதிர்கொள்வது வழக்கமாக உள்ளது.

தென் கொரியாவின் முதல் பெண் அதிபரான பார்க் கியுன்-ஹை, 2017ல் ஊழல் குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் முன்னாள் அதிபர் மூன் ஜே- இன் மீது தற்போது அரசு சார்பில் லஞ்ச வழக்கு பதியப்பட்டுள்ளது. தென்கொரியாவின் ஈஸ்டர் ஜெட் விமான நிறுவனம் 2019ல் தாய்லாந்து முதலீட்டாளர்களின் கூட்டு முயற்சியுடன், தாய் ஈஸ்டர் ஜெட் என்ற பெயரில் விமான சேவையை துவங்க திட்டமிட்டது.

அதன் பின் கொரோனா தொற்று காரணமாக, அந்த நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி பட்ஜெட் விமான சேவை திட்டத்தை கைவிட்டது. இந்த நிறுவனத்தில் 2018 முதல் 2020 வரை தென்கொரிய முன்னாள் அதிபர் மூனின் மருமகன் பல லட்ச ரூபாய் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டார்.

அவருக்கு விமான தொழிலில் எந்த முன் அனுபவமும் இல்லை என்றும், லஞ்ச பணத்தை முன்னாள் அதிபர் மூன், இவரது பெயரில் பெற்றதாகவும் தற்போது அரசு வழக்கு பதிந்துள்ளது. தென் கொரியாவில் விரைவில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், முன்னாள் அதிபர் மீதான லஞ்ச வழக்கு அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.