தேசபந்துவின் பிணைக்கு எதிராக சீராய்வு மனுத் தாக்கல் செய்ய எதிர்பார்ப்பு – பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஷ்

0
8

காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிராக, மேல் நீதிமன்றில் சீராய்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக, பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஷ் நேற்று மாத்தறை நீதவான் நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளார்.

மாத்தறை நீதவான் அனுர இந்திரஜித் புத்ததாசவினால் நேற்றையதினம் தேசபந்து தென்னகோன் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டார். சாட்சியங்களுக்கு எதிராக செயற்படுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் அவ்வாறான குற்றங்கள் பதிவானால் பிணை இரத்துச் செய்யப்படும் என்றும் பிரதிவாதிக்கு, நீதவான் எச்சரித்தார்.

அத்துடன் பிரதிவாதிக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டதுடன்இ அவரது கடவுச் சீட்டை நீதிமன்றிடம் கையளிக்குமாறும் உத்தரவிடப்பட்டது. எவ்வாறாயினும், பிரதிவாதிக்கு எதிரான விசாரணைகள் முக்கிய கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அவருக்குப் பிணை வழங்கப்படுவதற்குப் பிரதி மன்றாடியார் நாயகம் கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.இந்தநிலையில் தேசபந்து தென்னகோனின் பிணைக்கு எதிரான சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டி இருப்பதாகவும் பிரதி மன்றாடியார் நாயகம் திலீப பீரிஷ் மன்றுரைத்தார்.