தேசியப் பொருளாதாரத்திற்கான பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும் – பிரதமர்

0
6

உலகளாவிய ரீதியிலும் தேசிய ரீதியிலும் பொருளாதாரத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான வலுவான தேவை உள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து ஏற்பாடு செய்த பெண் தொழில்முயற்சியாளர் நிதிக் குறியீடு (WE Finance Code) வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை அறிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் ஆண்களின் சதவீதம் உலகளவில் 72% மற்றும் உள்நாட்டில் 71% ஆகும். ஆனால் அதனுடன் ஒப்பிடுகையில், பெண் பங்கேற்பு சதவீதம் முறையே 47% மற்றும் 32% வீதமாகும், பாலின வேறுபாடு தொழிற்படை பங்கேற்பில் வலுவான தக்கத்தை கொண்டுள்ளது என்பதை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

பெண்கள் தொழில்முயற்சியாளர்களாக முன்னேறுவதைத் தடுக்கும் நிதி அணுகல், சந்தை, தொழிலாளர் பயிற்சி மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றில் தற்போதுள்ள கட்டமைப்புத் தடைகளை நீக்குவது மிகவும் முக்கியமானதாகும்.

பொதுப் போக்குவரத்து மற்றும் வேலைத்தளங்களில் உள்ள பாதுகாப்பின்மையினால் மாத்திரமன்றி, சமூக-கலாசார நியதிகளால் உருவாக்கப்பட்ட பெண்கள் மீது வீட்டுப் பொறுப்புகளை பெருமளவில் சுமத்துவதன் காரணமாகவும் இலங்கையில் பெண்கள் மேலதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

உலகளவில், முறைசார் நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) 5.2 டிரில்லியன்  அமெரிக்க டொலர்களும் முறைசாரா நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 2.9 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் உலகளாவிய நிதி இடைவெளி காணப்படுகிறது.

நுண், சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்களைப் பொறுத்தவரை, இலங்கையின் நிதி இடைவெளி சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.  இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21 % ஆகும், இதற்கு முக்கியக் காரணம் பெண்களால் நடத்தப்படும் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகங்கள் சமமற்ற முறையில் அழுத்தங்களுக்கு உள்ளாவதாகும்.

பெண் தொழில்முயற்சியாளர்களுக்கான நிதி இடைவெளியை நீக்குவதன் மூலம், உலகப் பொருளாதார பெறுமதியில் 5-6 டிரில்லியன் அமெரிக்க டொலர் மேலதிக பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ள முடியும்.

தலைமைத்துவம், செயல் முனைப்பு மற்றும் தரவு அடிப்படையிலான அணுகுமுறைகள் மூலம் பெண் தொழில்முயற்சியாளருக்கான பொருளாதார அபிவிருத்திக்கான பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் உலகளவில் செயற்படும் பெண் தொழில்முயற்சியாளர்களின் நிதி இலக்கு பற்றியும் பிரதமர் இங்கு குறிப்பிட்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) ஆதரவுடன் இதனை நடைமுறைப்படுத்திய முதல் 24 நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதுடன், 2024 ஆகஸ்ட்  மாதம், பெண்கள் தலைமையிலான தொழில் முயற்சி நிறுவனங்களுக்கான தேசிய வரையறைகளை தயாரிக்கும் பணி வெற்றிகரமாக சாத்தியமானதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

இது தரவு சேகரிப்பு மற்றும் அறிக்கையிடலை மேம்படுத்தி மேலும் பயனுள்ள கொள்கை உருவாக்கத்திற்கு வழிவகுப்பதாகவும், கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நிதி உதவி மற்றும் கொள்கை ஆலோசனைகள் உட்பட ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய ஆதரவைப் பாராட்டிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பெண்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கும், நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளை மேம்படுத்துவதற்கும் தேசிய கூட்டமைப்பை நிறுவுவதற்கும் அரசாங்கம் ஆதரவளிக்கும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.