தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் முதல் நாளில் அடைவு மட்டத்தை எவரும் எட்டவில்லை !

0
52

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கு முன்னோடியாக தியகம விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமான ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியான 102ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியின் முதலாம் நாளன்று எந்தவொரு வீரரோ, வீராங்கனையோ  ஒலிம்பிக்   அடைவு மட்டத்தை எட்டவில்லை.

ஒலிம்பிக் தகுதியைப் பெறக்கூடியவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட ருமேஷ் தரங்க, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ஒலிம்பிக் அடைவு மட்டத்தை எட்டத் தவறியமை ஸ்ரீலங்கா அத்லெட்டிக்ஸை (இலங்கை மெய்வல்லுநர் நிறுவனம்) ஏமாற்றம் அடையச் செய்தது.

தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய எறிதல் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 85.45 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த ருமேஷ் தரங்க, தியகமவில் ஈட்டியை 77.10 மீற்றர் தூரத்திற்கு எறிந்து பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தார்.ஒலிம்பிக் வீரரான சுமேத ரணசிங்க 77.68 மீற்றர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து முதலாம் இடத்தைப் பெற்றார்.

ஆனால் அவர்கள் இருவரும் ஒலிம்பிக் அடைவு மட்டமான 85.00 மீற்றர் தூரத்தைவிட சுமார் 8.00 மீற்றர் குறைவாகவே வீசினர்.இது இவ்வாறிருக்க, ஒலிம்பிக் 100 ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு தகுதிபெறுவார் என எதிர்பார்க்கப்படும் யுப்புன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீற்றர் தகுதிகாண் போட்டியில் புதன்கிழமை (26) பங்குபற்றவுள்ளார். இறுதிப் போட்டி வியாழக்கிழமை காலை நடைபெறவுள்ளது.