உள்ளூராட்சி தேர்தல் விரைவில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியும் ஏனைய கட்சிகளும் எவ்வாறு போட்டியிடுவது என்று தங்களின் அபிப்பிராயங்களை வெளியிட்டு வருகின்றன.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இது தொடர்பில் கருத்துகளை வெளியிட்டியிருக் கின்றார். முதலில் இது தொடர்பில் பொதுவெளியில் பேச வேண்டிய அவசியமில்லை. ஒரு விடயத்தில் தெளிவான நிலைப்பாடு இருந்தால் அதனை செயலில் காண்பிக்க வேண்டுமே தவிர, அதனையும் ஓர் அரசியலாக்க வேண்டியதில்லை.
உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் – அதுதான் இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு சரியானது என்னும் அடிப்படையில் தான் அந்தக்கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் முடிவை எடுத்திருந்தது. இந்தப் பின்புலத்தில்தான் அதுவரையில் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளாக இருந்த ஏனைய கட்சிகள் தனித்துப் போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.
இலக்க அடிப்படையில் ஐந்து கட்சிகள் தேவையென்னும் அடிப்படையில் இன்னும் சிலரையும் இணைத்துக் கொண்டு தங்களை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியாக தேர்தலில் முன்னிறுத்தியிருந்தன. இலங்கை தமிழ் அரசுக் கட்சி தனித்துச் செல்லும் முடிவை எடுக்காதிருந்திருந்தால் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ மற்றும் த.சித்தார்த்தன் தலைமையிலான டி பி.எல்.எவ் (புளொட்) ஆகிய கூட்டமைப்பின் பங்காளிகள் ஒருபோதும் தனித்துச் செல்லும் முடிவை எடுத்திருக்கமாட்டார்கள்.
இந்தப் பின்புலத்தில் விடயங்களை நோக்கினால், முன்னர் ஓர் உள்ளூராட்சி தேர்தலை முன்வைத்து உடைவுற்ற அல்லது சிதறிப்போன கூட்டமைப்பை – இன்னோர் உள்ளூராட்சி தேர்தலை முன்வைத்து ஒட்ட வைக்க முடியுமா? முயன்றால் இது முடியாத விடயமல்ல. ஆனால், இலங்கை தமிழ் அரசு கட்சி கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 8 ஆசனங்களைப் பெற்று பிரதான கட்சியாகத் தங்களை முன்னிறுத்திக் கொண்டது. எதிரணியாக போட்டியிட்ட ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி – ஐந்து கட்சிகளின் கூட்டாகத் தங்களைக் காண்பித்தபோதிலும்கூட, ஓர் ஆசனத்தையே பெற முடிந்தது.
இந்த நிலையில் ஒரு தேர்தல் கூட்டாக சம அந்தஸ்தோடு இணைந்து செயல்படுவது எவ்வாறு சாத்தியப்பட முடியும்? அதுவும் முயன்றால் முடியும். ஆனால், இலங்கை தமிழ் அரசு கட்சி தங்களுடைய உறுப்பினர்களுக்கு ஒதுக்க வேண்டிய ஆசனங்களை – தோல்வியடைந்த ஏனைய கட்சிகளுக்கு வழங்குவதற்கு முனவருமா? இந்தக் கேள்விகளிலிருந்துதான் உள்ளூராட்சி தேர்தலை அனைவருமாக இணைந்து எதிர்கொள்வதிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை நோக்கவேண்டும்.
ஏனெனில், தமிழ்த் தேசியத்தை அவ்வப்போது உச்சரித்துக் கொண்டாலும் தேர்தல் நலன்களின் அடிப்படையில்தான் அனைததுக் கட்சிகளுமே சிந்திப்பதுண்டு. இந்த நிலையில் மக்களை கருத்தில் கொண்டு தமிழ் கட்சிகள் சிந்தித்ததாக கடந்த பதினைந்து வருடங்களில் சான்றில்லை. ஆனால், இன்றைய சூழலில் தமிழர் அரசியலை ஒப்பீட்டடிப்படையில் – மிகவும் பலவீனமான நிலையிலாவது ஒரு ஜனநாயக வலுவாக காண்பிக்க வேண்டுமென்றால் – வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகள் ஓர் ஐக்கிய முன்னணியாகத் தேர்தல்களை எதிர்கொண்டால் மட்டுமே அது சாத்தியப்படும்.