தேர்தலில் சின்னத்தின் பெறுமதி?

0
129

தேர்தலில் எது சிறந்த சின்னம் என்னும் கேள்வி எழுந்திருக்கின்றது? இதனடிப்படையில் உரையாடல்கள் இடம்பெறுவதையும் காணமுடிகின்றது.
தமிழரசு கட்சி தனியாகத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில்தான் இந்த விவாதம் மேலெழுந்திருக்கின்றது.
தமிழ்த் தேசிய அரசியல் வரலாற்றை உற்றுநோக்கினால் தேர்தல் சின்னங்களுக்கு பிரதான முக்கியத்துவம் இருந்ததாகக் கூறவிட முடியாது.
ஆரம்பத்தில் தமிழரசு கட்சியின் ‘வீடு’ சின்னமே தமிழ்த் தேசிய அரசியலின் அடையாளமாக இருந்தது.
1970களுக்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் சூழலில் தமிழரசு கட்சியின் தேவைப்பாடு கேள்விக்கு உள்ளாகியது.
புதிய அரசியல் சூழலை எதிர்கொள்வதற்கு தமிழரசு கட்சி பொருத்தமானதுதானா என்னும் கேள்வி எழுந்தது.
இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் உதய சூரியன் சின்னத்தின் கீழ் தமிழர் ஐக்கிய கூட்டணியை உருவாக்கினார் – பின்னர் அதுவே தமிழர் விடுதலைக் கூட்டணியானது.
வீட்டுச் சின்னம் கிடப்புக்குச் சென்றது.
இந்த பின்புலத்தில் நோக்கினால் வீட்டுச் சின்னம் தனித்துவமானதென்னும் வாதம் சரியானதல்ல.
அரசியல் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் கருதி கட்சிகளுக்கான சின்னங்களும் மாறியிருப்பதே வரலாறு.
2001இல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவானபோது அதன் சின்னமாக இருந்தது உதயசூரியனாகும்.
பின்னர் ஆனந்தசங்கரியுடன் ஏற்பட்ட முரண்பாடுகளின் காரணமாகவே பல வருடங்களாக கவனிப்பாரற்றுக் கிடந்த வீட்டுச் சின்னம் மீளவும் அரசியல் அரங்குக்கு வந்தது.
ஒருவேளை ஆனந்தசங்கரி விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் முரண்படவில்லையாயின் கூட்டமைப்பின் சின்னமாக உதயசூரியனே தொடர்ந்திருக்கும்.
இப்போது மீளவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சின்னம் மாறியிருக்கின்றது.
இதுவரையில் கூட்டமைப்பின் சின்னமாக இருந்த வீடு, தமிழரசு கட்சியின் சின்னமாக மாறியிருக்கின்றது.
இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சின்னமாக குத்துவிளக்கு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.
உண்மையிலேயே சின்னங்கள் மக்களின் வாக்களிப்பை தீர்மானிக்கின்றனவா? பொதுவாக இவ்வாறானதோர் அபிப்பிராயம் நிலவுகின்றது.
2018இல் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தின் கீழ் ஒரு புதிய கூட்டு உருவானது.
சுரேஷ் பிறேமச்சந்திரன் தலைமையிலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் அதில் அங்கம் வகித்திருந்தது.
உதயசூரியன் சின்னத்தை முன்னிலைப் படுத்துவதன் ஊடாக வீட்டுச் சின்னத்தை கேள்விக்கு உள்ளாக்கலா மென்னும் நம்பிக்கையே கூட்டிலிருந்தவர்களிடம் இருந்தது.
ஆனால், அவ்வாறு நிகழவில்லை.
எனவே, இங்கு சின்னம் ஒரு விடயமல்ல.
ஒரு கட்சி மக்கள் மத்தியில் எவ்வாறு நம்பிக்கையை கட்டியெழுப்புகின்றது என்பதே முக்கியமானது.
உதாரணமாக சிறீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறிய ராஜபக்ஷக்கள் அதுவரையில் மக்கள் அறிந்திராத மொட்டு சின்னத்தின் கீழ் தங்களின் அரசியல் பயணத்தை ஆரம்பித்தனர்.
மிகவும் குறுகிய காலத்தில் மொட்டுச் சின்னத்தின் கீழ் சிங்கள மக்களை அணிதிரட்டினர்.
ஆட்சியையும் கைப்பற்றினர்.
எனவே, எந்தவொரு சின்னத்தின் கீழும் மக்களிடம் செல்லலாம் – ஆனால், மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.
மக்களுடன் உரையாடுவதை ஒரு தொடர்ச்சியான செயல்பாடாக முன்னெடுக்க வேண்டும்.
வீட்டுச் சின்னமா – குத்துவிளக்கா அல்லது பானையா என்பதல்ல இங்கு பிரச்னை – எவர் மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புகின்றார் என்பதே அடிப்படையானது.
ஒருவேளை தமிழரசு கட்சி வீட்டுச் சின்னத்தின் கீழ் அதிகமான மக்களின் ஆதரவை பெறுகின்றதென்றால், அதன் பொருள், தமிழரசு கட்சி பலமானதாக இருக்கின்றது என்பதல்ல – மாறாக, தமிழரசு கட்சியை எதிப்பவர்கள் – மக்கள் மத்தியில் தங்களை சரியாக நிறுவுவதில் தோல்வியடைந்துவிட்டனர் என்பதுதான்.