தேர்தல் ஆணைக்குழுக்குள் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான முயற்சிகளே முன்னெடுக்கப்படுகின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சுதந்திர மக்கள் சபையின் ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். உள்ள10ராட்சிமன்ற தேர்தலை ஒத்திவைப்பதற்கான எந்த காரணங்களும் அரசாங்கத்திடம் இல்லை. அவ்வாறு எந்த காரணம் இருந்தாலும் அது வெற்றிபெறாது. இதனை எம்மால் உறுதிபட கூற முடியும். போலியான பிரசாரங்களுக்கு எவ்வித மட்டுப்பாடுகளும் இல்லை. தேர்தல் ஆணைக்குழு பிரிந்து நின்று செயற்படுவதாக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பபடுகின்றன.
தேர்தல் ஆணைக்குழுவில் பல்வேறு நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. இது தீவிரமான நிலைமையாகும். தேர்தல் ஆணைக்குழு என்பது, உறுதியான நிலைப்பாட்டுக்கு வரவேண்டியது அவசியமாகும். தேர்தலை நடத்துவது தொடர்பில் பாரிய சிக்கல் நிலைமை காணப்படுவதாக தொடர்ச்சியாகக் கூறி வருகின்றனர்.
இது முற்றிலும் பொய்யான கருத்தாகும். தேர்தல் ஆணைக்குழுவில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. மக்களை திசைதிருப்புவதற்காகவே இவ்வாறான கதைகளை புனைந்து வெளிவிடுகின்றனர். தேர்தலை நடத்துவது தொடர்பில், தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் அதற்கு சான்றுபகர்கின்றது.
இந்த வர்த்தமானி அறிவித்தில் ஐந்து பேர் கையொப்பமிட்டுள்ளனர். இதனூடாக தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கருத்து வேறுபாடுகளின்றி ஒற்றுமையுடன் இருக்கின்றனர் என்பது தெளிவாக புரிகின்றது. இல்லாத ஒரு பிரச்சினையை உருவாக்கி நீதிபதிகளை இந்த பிரச்சினைக்குள் உள்வாங்குவதற்கு முயற்சிக்கின்றனர்.