நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஒரு கருத்தைத் தெரிவித்திருக் கின்றார். அதாவது, ‘தேர்தல் நெருங்கிவருவதால் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடகமாடுகின்றனர்.
இதுவரையில், வடக்கு மக்கள் தொடர்பில் அக்கறைப் படாதவர்கள் இப்போது திடீரென்று கரிசனைப்படுகின்றனர். 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப் போவதாகவும் கூறுகின்றனர். இவர்கள்தான் கடந்த காலத்தில் அதனை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டபோது அதற்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தவர்கள்’ – இந்த வகையான அரசியலுக்குள்தான் விஜயதாஸ ராஜபக்ஷவும் அடங்குவார். ஆனால், அவர் கூறுவதில் ஓர் உண்மை உண்டு.
அதாவது, தேர்தல் கால கரிசனைகள் பெரும்பாலும் ஒரு வகையான அரசியல் நடிப்பு என்பதில் உண்மை உண்டு. இன்று 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பேசி வரும் அனை வருமே கடந்த காலத்தில் அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதற்காக குரல் கொடுத்தவர்கள் அல்லர். மாறாக, 13இற்கு எதிராக அடிப்படைவாதிகள் – பௌத்த பிக்குகள் வீதிகளில் இறங்கியபோது அதனை கண்டிக்காதவர்கள். அப்போது நியாயத்தின் பக்கமாக நின்ற வர்கள் அல்லர்.
அனைவருமே அமைதியாக இருந்து எதிர்ப்பை மறை முகமாக ஆதரித்தவர்கள்தான். ஒன்று எதிர்க்கப்படும்போது அது நியாய மற்றது என்றால் அதற்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள்தான் நியாயத்தின் பக்கமாக இருப்பவர்களாவர். அவ்வாறான வரலாற்றை எந்தவொரு தென்னிலங்கை வேட்பாளரும் கொண்டிருக்கவில்லை.
ஆனால், தென்னிலங்கை வேட்பாளர்கள் அனைவருமே, ஒரு விடயத்தில் உறுதியாக இருக்கின்றனர். அதாவது, தேர்தல் கால வாக்குறுதி களால் தமிழ் மக்களை திருப்திப்படுத்திவிட முடியுமென்று எண்ணுகின்றனர். இதற்கு யார் காரணம்? தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்த் தேசிய கட்சிகளே இதற்கான காரணமாகும்.
ஏனெனில், அவர்களும் இவ்வாறான தேர்தல்கால நாடகங்களை நம்புமாறுதான் தமிழ் மக்களை கோருகின்றனர். அண்மையில், வடக்குக்கு வந்திருந்த அநுரகுமார திஸநாயக்க தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்களை வீடு தேடிச் சென்று சந்தித்திருந்தார்.
ஒரு வேட்பாளர் அரசியல் கட்சிகளை சந்திப்பதில் பிரச்னையில்லை. அது சாதாரணமான ஒன்றுதான் ஆனால், இலங்கை தமிழ் அரசு கட்சியுடனான சந்திப்பின் பின்னர், தமிழ் அரசு கட்சியின் தலைவர்கள் புடைசூழ அநுரகுமார திஸநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தார்.
தமிழ் அரசு கட்சியும் இணைந்து பங்குகொள்வது போன்றதொரு தோற்றப்பாடே வெளிப்பட்டது. தேர்தல்கால வாக்குறுதிகளை நம்புங்கள் என்று கூறுவதைப் போன்றுதான் அந்த சந்திப்பு நடைபெற்றிருந்தது.
உண்மையில், ஒரு வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம்தான் அவரின் அரசியல் நிலைப்பாடு. அது வெளிப்படாத வரையில் அவரை நம்புதல் என்னும் பேச்சுக்கே இடமில்லை. ஆனாலும், தென்னிலங்கை வேட்பாளர்களின் தேர்தல்கால நாடக வசனங்களை தொடர்ந்தும் நம்புங்கள் என்றவாறே தமிழ் அரசு கட்சியின் தலைவர்கள் சிலரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.
இது அடிப்படையிலேயே தவறானது. அண்மையில், இந்திய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பின்போதுகூட, தமிழ் அரசு கட்சியை சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் பொது வேட்பாளரின் நியாயத்தை சுட்டிக்காட்டியபோது, தமிழ் அரசு கட்சியின் இன்னொரு பாராளு மன்ற உறுப்பினர் அதனை மறுதலித்திருக்கின்றார்.
இத்தனைக்கும் தமிழ் அரசு கட்சி இன்னும் அதன் உத்தியோகபூர்வ முடிவுகள் எதனையும் எடுத்திருக்கவில்லை. இது தொடர்பில் அறிக்கை வெளியிட்ட கட்சியின் தலைவரும் குறித்த சந்திப்பில் இருந்திருக்கின்றார்.
தமிழ் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தும் ஒரு கட்சி இவ்வாறு நடந்து கொண்டால் தென்னி லங்கை வேட்பாளர்கள் தமிழ் மக்களை குறைவாக எடை போடுவதில் என்ன தவறு உண்டு?