தேவை வெறும் சொற்கள் அல்ல – செயலாகும்?

0
175

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், ரணில் விக்கிரமசிங்கவுக்கு காலக்கெடுவை விதித்திருப்பதாகவும் – ஜூலை 10ஆம், திகதிக்கு முன்பதாக அரசியல் தீர்வை உறுதிப்படுத்தாவிட்டால், சர்வதேசத்திடம் செல்லவுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
சர்வதேசத்திடம் செல்லும் கதையைக் கூறி, ரணில் விக்கிரமசிங்கவை விரட்ட முடியுமா என்பதற்கப்பால், இன்னும் எவ்வளவு காலத்திற்கு இதனைக் கூறிக்கொண்டிருப்பது? செய்யும் வல்லமையுள்ளவர்கள் ஒருபோதும் இவ்வாறு, சொல்லிக் கொண்டிருக்கமாட்டார்கள் – அவர்கள் செயலில் தங்களின் ஆற்றலை நிரூபிப்பார்கள்.
உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததற்குப் பின்னரான, கடந்த 14 வருடங்களில் சர்வதேசத்திடம் முறையிடும் கோரிக்கையுடன்தான், தமிழர் அரசியல் முன்னெடுக்கப்பட்டது.
இன்றுவரை ஒரு மந்திரம் போன்று, அனைத்து கட்சிகளின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும், அதனை உச்சரித்துக்கொண்டிருக்கின்றனர்.
ஆனால், அரசாங்கமோ, அதன் செயற்பாடுகளை எவ்வித அச்சமுமின்றி முன்னெடுத்துக்கொண்டே செல்கின்றது.
கொழும்பின் ஆளும் வர்க்கம் பிராந்திய சர்வதேச அரசியல் ஒழுங்கை நன்கு புரிந்துகொண்டு, விடயங்களைக் கச்சிதமாக முன்னெடுத்து வருகின்றது.
ஆனால் தமிழர் தரப்போ, சர்வதேச சமூகம் என்பதை, ஒரு சர்வலோக நிவாரணி போன்ற கற்பனையுடன் மக்களுக்கு போலியான நம்பிக்கையை ஊட்டிவருகின்றது.
தமிழர் தரப்பு சர்தேச அழுத்தங்களை ஏற்படுத்தியிருப்பதாக கூறிவந்த கடந்த 14 வருடங்களில், வடக்கு-கிழக்கின் மீதான அரச செயற்பாடுகள் எவ்விதத்திலும் நிறுத்தப்படவில்லை.
பௌத்த மயமாக்கல் நிகழ்ச்சிநிரலை எந்த ஆட்சியாளரும் கைவிடவில்லை.
அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தில் ஒரு சிறிதளவு கூட முன்நகரவில்லை.
ஒற்றையாட்சி நிலைப்பாட்டை எவருமே கைவிடவில்லை.
ஆகக் குறைந்தது அரசியலமைப்பிலுள்ள விடயங்களைக்கூட, அமுல்படுத்த முயற்சிக்கவில்லை.
இந்தியா தொடர்ந்தும் 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் மட்டுமே வலியுறுத்தி வருகின்ற நிலையில், அமெரிக்க மற்றும் மேற்குலக தரப்புகளோ, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் வாய் திறப்பதேயில்லை.
மேற்குலகமோ, அரசியல் மறுசீரமைப்பு, நல்லாட்சி என்னும் சொற்களை மட்டுமே மீண்டும், மீண்டும் கூறிவருகின்றது.
மனித உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் கரிசனையை காண்பித்தபோதிலும் கூட, இதுவரையில் அழுத்தங்களுக்கு அஞ்சி, அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை.
உண்மையில் மேற்குலக அழுத்தங்களை அரசாங்கம் பாரதூரமான ஒன்றாக நோக்கவில்லை.
பிராந்திய மற்றும் சீனாவுடனான இராஜதந்திர உறவுகளை கொண்டு, சர்வதேச அழுத்தங்களை சமநிலைப்படுத்த முடியுமென்று அரசாங்கம் நம்புகின்றது.
அந்த நம்பிக்கை இதுவரையில் அராசாங்கத்தை கைவிடவில்லை.
இதனால் அவர்கள் தொடர்ந்தும் தங்களின் இராஜதந்திர வழிமுறையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையுடனேயே செயற்பட்டு வருகின்றனர்.
அரசாங்கத்தின் இராஜதந்திர நகர்வுகளுக்கு சமதையான இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுக்க தமிழர் தரப்புக்களால் இயலவில்லை.
அது இலகுவில் இயலக்கூடிய காரியமும் அல்ல.
ஏனெனில் – ஒரு அரசிற்கு இருக்கின்ற இராஜதந்திர வாய்ப்புக்கள், அரசல்லாத சமூகமொன்றிற்கு ஒருபோதும் சாத்தியப்படாது.
ஆனால் யூத சமூகம் வீழ்ச்சியை சந்தித்தபோது, தனது ஆற்றல் முழுவற்றையும் திரட்டி மேலேழுந்தது.
தனக்கான நாடு ஒன்றை உருவாக்கியது.
அவ்வாறான ஆளுமையை நிரூபிக்கக்கூடிய சமூகமாக இதுவரையில் தமிழ் சமூகம் தன்னை நிரூபிக்கவில்லை.
இந்த நிலையில் வெறும் அரசியல் சுலோகங்களுக்கு அப்பால், எதனையும் தமிழர் அரசியல் பரப்பில் காணமுடியவில்லை.