முல்லைத்தீவில், கன மழை காரணமாக, 695 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும், முற்றுமுழுதாக நிறைந்து வான் பாய்கின்ற நிலைமை காணப்படுகிறது.
இவ்வாறு திடீரென வந்த வெள்ளம் காரணமாக, ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம், பண்டாரவன்னி உள்ளிட்ட பகுதிகளில், மக்களின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதனால், பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளதுடன், அவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகிறது.
குளங்களுக்கான நீர்வரத்து மிக வேகமாக காணப்படுகின்ற நிலையில், பல்வேறு குளங்களும் உடைப்பெடுக்கும் அபாயத்தையும் எதிர்நோக்கியுள்ளதாகவும், வான்பாய்கின்ற வேளை, மக்கள் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் செல்வதற்கான வாய்ப்புகள் இருப்பதனால், மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும் என, முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று காலை வெளியான தகவலின் அடிப்படையில், மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவில், அம்பாள்புரம், கரும்புள்ளியான், ஒட்டறுத்தகுளம், நட்டாங்கண்டல், பாண்டியன்குளம், செல்வபுரம், பாலிநகர், சிராட்டிகுளம், சிவபுரம், மூன்றுமுறிப்பு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில், 261 குடும்பங்களை சேர்ந்த 870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில், மாங்குளம், பனிக்கன்குளம், பண்டாரவன்னி, இந்துபுரம், தட்டையர்மலை, புளியங்குளம், தச்சடம்பன் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில், 127 குடும்பங்களை சேர்ந்த 423 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கள்ளப்பாடு, சிலாவத்தை, செல்வபுரம், வற்றாப்பளை, தண்ணிமுறிப்பு, முள்ளியவளை தெற்கு, கள்ளப்பாடு வடக்கு, கள்ளப்பாடு தெற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில், 44 குடும்பங்களை சேர்ந்த 136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
துணுக்காய் பிரதேச செயலக பிரிவில், அணிஞ்சியன்குளம், உயிலங்குளம், தென்னியங்குளம், கோட்டைகட்டிய குளம், ஆலங்குளம், தேராங்கண்டல், கல்விளான், மல்லாவி, யோகபுரம் கிழக்கு, புகழேந்திநகர், பாரதிநகர், யோகபுரம் மேற்கு ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில், 86 குடும்பங்களை சேர்ந்த 267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில், புதுக்குடியிருப்பு மேற்கு, தேவிபுரம் கிராம அலுவலர் பிரிவுகளில், 177 குடும்பங்களை சேர்ந்த 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தில், 695 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் கிராம அலுவலர் பிரிவில் 4 குடும்பங்களை சேர்ந்த 17 பேரும், புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவில், 5 குடும்பங்களை சேர்ந்த 21 பேரும், பண்டாரவன்னி கிராம அலுவலர் பிரிவில், 19 குடும்பங்களை சேர்ந்த 55 பேரும் என, 28 குடும்பங்களை சேர்ந்த 93 பேர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.