தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் தேசிய சபையில் பங்கேற்க வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்த்தன நேரில் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிலையில் உடனடிப்பிரச்சினைகள் தொடர்பில் கடந்த காலங்களில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை உடன் நிறைவேற்றுமாறு தமிழ்த் தரப்புக்களால் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்த்தனவின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்று பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். இந்தச் சந்திப்பில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், கோவிந்தன் கருணாகரம், தவராசா கலைரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். சுமார் ஒருமணிநேரம் வரையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, நாட்டின் தற்போதைய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, தேசிய சபையில் பங்கேற்றுக்கொள்ளுமாறு பகிரங்கமான அழைப்பினை விடுத்திருந்தார்.
எனினும், தமிழ்த் தரப்பு எம்.பிக்கள் அதனை உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த காலங்களில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்தனர். குறிப்பாக, கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்திற்கு ஒரு கணக்காளரை நியமித்தல், திருகோணமலை, குருந்தூர் மலை ஆகியவற்றில் தொல்பொருளின் பெயரால் மேற்கொள்ளப்படுகின்ற ஆக்கிரமிப்புக்கள், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகிய விடங்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் உடன் முன்னெடுக்கப்பட வேண்டும். அவ்வாறான சதகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் தேசிய சபையில் பங்கேற்பது குறித்து கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கு தயராக உள்ளோம் என தமிழ்த் தேசியக் கட்சிகள் தெரிவித்துள்ளன.