29 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

நடுநிலையான உலகக்கிண்ண மைதானம் தேவை – பாகிஸ்தான் 

செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தமது பரம வைரிகள் பாகிஸ்தானுக்கு வருகை தர மறுத்தால், தமது அணியின் உலகக் கிண்ணப் போட்டிகளை வரவேற்பு நாடான இந்தியாவுக்கு வெளியே நடுநிலையான விளையாட்டரங்குகளில் நடத்த வெண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் கோரியுள்ளார்.

அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டிக்காக அட்டவணை, மைதானங்கள் ஆகியவற்றை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வெளியிடத் தவறியுள்ளது.

இதன் காரணமாக உலகக் கிண்ணப் போட்டி தொடர்பான ஏற்பாடுகள் இன்னும் மர்மமாகவே இருந்துவருகின்றது.

நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டி ஆரம்மாவதற்கு இன்னும் 6 மாதங்கள் கூட இல்லாத நிலையில் தற்போதைய சூழ்நிலை ஓர் அசாதரணமானதாக தெரிகிறது.

பாகிஸ்தானுக்கு எவ்வாறு இடமளிப்பது என்பதே இந்தியாவின் இந்த தாமதத்திற்கு முக்கிய காரணம் என தோன்றுகிறது. அணு ஆயுத நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் கிரிக்கெட் வெறிகொண்ட நாடுகள் ஆகும்.

அது ஒரு புறம் இருக்க, பிரித்தானியாவிடம் இருந்து 1947இல் சுதந்திரம் கிடைத்த பின்னர் இரண்டு நாடுகளும் பல யுத்தங்களில் ஈடுபட்டதுடன் இன்றும் இராஜதந்திர ரீதியான மோதல்களில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான சூழ்நிலைகளுக்கு மத்தியில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை இந்தியாவும் வரவேற்பு நாடுகளாக முன்னின்று நடத்தவுள்ளன.

இந்தியா வழக்கமாக பங்கேற்கும்  ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை  செப்டம்பர் மாதம்  பாகிஸ்தான் நடத்துகிறது.

ஆனால், இராஜதந்திர பதற்றங்கள் மற்றம் நாட்டின் சவால்மிக்க பாதுகாப்பு ஆகியவற்றைக் காரணம் காட்டி உலகில் மிகவும் செல்வந்த மற்றும் சக்திவாய்ந்த அமைப்பான இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்  சபை பல வருடங்களாக தனது அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புவதற்கு மறுத்துவருகிறது.

தனது ஆசிய போட்டிகள் பாகிஸ்தானுக்கு வெளியே கொண்டு செல்லப்படவேண்டும் என இந்தியா விரும்புகிறது.

இந்நிலையில் தி இண்டியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், உலகக் கிண்ணப் போட்டிக்கு பரஸ்பர ஏற்பாடு அவசியம் என்ற நிபந்தனையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நஜாம் சேதி முன்வைத்தார்

‘இந்தியா இப்போது ஒரு நடுநிலையான இடத்தைப் பெற விரும்பி, கலவை மாதிரியை ஏற்றுக்கொண்டால், உலகக் கிண்ணப் போட்டியிலும் அதே கலவை  மாதிரியை    பயன்படுத்துவோம்,’ என அவர் கூறினார்.

தனது உலகக் கிண்ணப் போட்டிகளை பங்களாதேஷிலோ அல்லது இந்தியா ஏற்கும் வேறு எந்த மைதானத்திலோ விளையாட பாகிஸ்தான் தயாராக இருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், இரு நாடுகளுக்கு இடையேயான ‘இந்த அரசியல் முறுகலைத் தீர்ப்பதற்கு இது ஒரு முன்மாதிரியாக இருக்கும்’ என்று கூறினார்.

இந்தியாவின் பலம்வாய்ந்த உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவின் தலைமையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இயங்குகிறது.

ஆனால், பாதுகாப்பு ஒரு பிரச்சினை என இனிமேலும் காரணம் கூறமுடியாது என சுட்டிக்காட்டிய கிரிக்கெட் நிருவாகியாக மாறிய முன்னாள் பத்திரிகையாளர் சேதி, இந்திய அணி பாகிஸ்தானுக்கு விஜயம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என இந்திய அரசிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வலியுறுத்தவேண்டும் எனவும் தெரிவித்தார்.

சேதியின் இந்தக் கருத்துக்களுக்கு இந்திய கிரிக்கெட் தரப்பிலிருந்து உடனடியாக எவ்வித பதிலும் வரவில்லை.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles