நல்லாட்சி போன்று அரசமைப்புக்கு முரணாக இந்த அரசு செயல்படாது – ரொஷான்

0
199

மாகாண சபைத் தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்படும். நல்லாட்சி அரசாங்கம் அரசமைப்புக்கு முரணாகச் செயல்பட்டதைப் போன்று தற்போதைய அரசாங்கமும் அரசமைப்புக்கு முரணாகச் செயல்படாது. மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது அவசியமானதாகும்.

குறைபாடுகளுடன் தேர்தலை நடத்தினால் எதிர்காலத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:

மாகாண சபைகள் மூலம் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளின் உச்ச பயனை நாட்டு மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். 1000 மில்லியன் ரூபா நிதி ஒன்பது மாகாணங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகள் சிறந்த முறையில் நிறைவுப் பெறவில்லை. மாகாண சபைகளின் செயல்பாடு இனிவரும் காலங்களில் மாகாண சபை அமைச்சால் நேரடியாகக் கண்காணிக்கப்படும்.

அபிவிருத்திப் பணிகள் மாகாண சபைகளினாலும், மத்திய அரசாங்கத்தாலும் இருவேறுபட்ட திட்டமிடலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனால் பெருந்தொகையான நிதி வீண்விரயமாக்கப்பட்டுள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது. பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் மாகாண சபைகளை மையப்படுத்தி மக்களுக்கான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆகவே, அபிவிருத்திப் பணிகளின் உச்ச பயனை நாட்டு மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவோம். நல்லாட்சி அரசாங்கத்தை போன்று அரசமைப்புக்கு முரணாகச் செயல்பட வேண்டிய தேவை கிடையாது. மாகாண சபைகளுக்கு மக்களின் பிரநிதிகள் ஜனநாயக முறைக்கமைய தெரிவு செய்யப்படுவார்கள்.

அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி மாகாண சபைகளைச் சிறந்த முறையில் செயல்படுத்துவது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகும்- என்றார்.