நவீன உலகில் பெற்றோரை இழந்த குழந்தைகள் அதிகம் கொண்ட பகுதியாக காசா மாறியிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கடந்த 544 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது.
போரில் இதுவரை 50,523 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 1163 இஸ்ரேலியர்கள் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெற்றோர் ஆதரவற்ற குழந்தைகள் பற்றி பாலஸ்தீன அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிரங்களின்படி, 39,384 குழந்தைகள் தங்கள் பெற்றோர்களில் ஒருவரையாவது இழந்திருக்கிறார்கள் என்றும், இதில் 17,000 குழந்தைகள் பெற்றோரில் இருவரையும் இழந்திருக்கிறார்கள் என்றும் தெரிய வந்திருக்கிறது.
உலகம் முழுவதும் பாலஸ்தீன போர் கடுமையான விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்த போருக்கு தொடக்க காரணமாக ஹமாஸ் அமைப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. தாக்குதல் காரணமாக பதில் தாக்குதலில் இஸ்ரேல் இறங்கியது.
ஹமாஸ் அமைப்பினரை பழிவாங்குகிறேன் என்று சொல்லிக்கொண்டு இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீன பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் உயிரிழப்புகள் அதிகமாயின. மருத்துவமனைகள், கல்வி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடுத்தது.
உயிரிழப்பு ஒரு பக்கம் எனில், உயிர் பிழைத்தவர்கள் உணவு, குடிநீர், மருந்துக்காக நீண்ட போராட்டத்தை எதிர்கொண்டிருக்கின்றனர்.
போரில் மருத்துவமனைகள் அழிக்கப்பட்டிருப்பதால் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை கொடுக்க முடியாத சூழல் உருவாகியிருக்கிறது.
ஐநா சபை இதனை ‘மனிதாபிமான பேரழிவு’ என்றே அழைக்கிறது. காசாவில் 23 லட்சம் மக்கள் மக்கள் தங்க இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். பாதுகாப்பு மண்டலங்களில் தங்கியிருக்கும் மக்கள் மீது கூட குண்டு வீசப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
போர் நிறுத்தம் பற்றி ஓப்பந்தம் கொண்டுவரப்பட்டாலும் அதை நீட்டிக்க இஸ்ரேல் விரும்பவில்லை. எனவே போர் தொடர்ந்து வருகிறது. இது இப்படியே நீடித்தால் போரில் ஈரானும் இணைய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.