நாடாளுமன்றில் பொய்யுரைப்பதை தடுக்க வேண்டும் – நாமல் ராஜபக்ச யோசனை!

0
13

நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில் பொய் சொல்வதற்கு உள்ள உரிமையை நீக்கக் கோரி தனிப்பட்ட முறையில் யோசனை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை வழங்கப்படுவது மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவே தவிர பொய்யுரைப்பதற்கு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். பொதுஜன பெரமுன கட்சியின் சட்டத்தரணிகள் உடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்துரைக்கையில்,

‘நாடாளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில் பொய் சொல்வதற்கு இருக்கும் உரிமையை நாம் நீக்க வேண்டும் எனக் கடந்த நாளில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தேன். இன்று நீங்கள் கேள்வி கேட்கும் போதும் தடுமாறுகின்றனர். நாடாளுமன்றத்திற்குள் வரையறை இல்லாமல் பொய் சொல்கின்றார்கள். அதற்குக் காரணம் சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ளமை ஆகும். நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை வழங்கப்படுவது மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவே தவிரப் பொய் உரைப்பதற்கு அல்ல. அதனால் நாங்கள் நினைக்கின்றோம் இந்த நடைமுறை மாற்றம் செய்யப்பட வேண்டும். அரசாங்கம் செயற்படாவிட்டாலும் நாங்கள் தனிப்பட்ட முறையில் யோசனை ஒன்றைக் கொண்டு வந்து அதனை மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்போம்.

நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேரில் எத்தனை பேர் பொய் சொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் எனப் பார்க்கலாம். நாம் உண்மை பேசினால் நமக்கு அந்த உரிமை தேவையில்லையே. எனக்குத் தேவையில்லை. நாடாளுமன்றத்திலும் வெளியிலும் செய்ய முடியாததை நான் சொல்ல மாட்டேன். செய்யமுடியாத ஒன்றைச் சொல்வதும் இல்லை. இன்னொருவரைத் தரக்குறைவாகக் கதைக்க மாட்டேன். 225 பேரும் அதனைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் எனில் நான் கொண்டு வரும் யோசனைக்கு வாக்களிப்பார்கள். தனது பொய்யைக் கொண்டு அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.’ என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கூறினார்.