நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனுடன் வருகை தந்த குழுவினருக்கும் பிறிதொரு தரப்பிற்கும் இடையில் நேற்று மாலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தால், வவுனியா – வைரவப்புளியங்குளம் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வவுனியா – வைரபுளியங்குளம் பகுதியில் கடந்த சில தினங்களாக இளைஞர் குழுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக அடிதடி சம்பவங்கள் இடம்பெற்று வந்தது.
இந்நிலையில் நேற்றையதினமும் குறித்த பகுதியில் அதிகளவான இளைஞர்கள் குழுமியிருந்தனர். இதனையடுத்து அந்தப்பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தனது சகாக்களுடன் சென்றிருந்தார்.
இளைஞர்கள் சிலருக்கும் அவர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்போது அங்கு பிரசன்னமான பிறிதொரு குழுவினர், திலீபன் எம்.பியுடன் வருகை தந்த சகாக்கள் மீது தாக்குதல் நடாத்தினர். இரு பகுதியினருக்கும் இடையில் மோதல் முற்றியது.
நாடாளுமன்ற உறுப்பினர் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயற்சி எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்தநிலையில் சம்பவ இடத்திலிருந்து உடனடியாக அகன்ற நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன், தனது அலுவலகத்திற்குச் சென்றார். எனினும் அவரது சகாக்களை துரத்திச்சென்ற குழுவொன்று மன்னார் வீதியில் அமைந்துள்ள மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரின் அலுவலகத்திற்குள் உட்புகுந்து தாக்க முற்ப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மோதலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவரை கைதுசெய்தனர்.