நாட்டின் நெருக்கடிக்கான குறுகிய கால நீண்டகால தீர்வுகள் இடைக்கால வரவு-செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (1) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடு பாரிய நெருக்கடிகளை சந்தித்து இருக்கும் தருணத்திலேயே இடைக்கால வரவு -செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கூறுவதைபோன்றே கூறினால் இன்று நாடானது வங்குரோத்து அடைந்த, கடனை மீள செலுத்திக்கொள்ள முடியாத ஒரு நாடக காணப்படுகின்றது.
வெளிநாடுகள் எமக்கு கடன் வழங்க முன்வரவில்லை. அரசாங்கம் எடுத்த தீர்மானங்களால், நட்புநாடுகள் கூட நேசக்கரம் நீட்டுவதற்கு பின்வாங்குகின்றன.
இவ்வாறான ஒரு துர்ப்பாக்கிய நிலைமை நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ளது.
இளைஞர்களும் வயோதிபர்களும் கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் நிற்பதை பார்க்கும் போது நாடு எதிர்காலத்தில் எவ்வாறான ஒரு நிலைமையை எதிர்கொள்ள போகின்றது என்ற கேள்வி எழுகின்றது?
நாட்டின் எதிர்காலம் தொடர்பில் ஒருவித அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் எரிபொருள் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி கூறினாலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக எரிபொருள் வரிசை அதிகரித்தே காணப்படுகின்றது.
எரிபொருள் பிரச்சினைக்கு ஸ்திரமான நீண்ட தீர்வு கிடைக்கவில்லை.
அதேபோன்று பட்டினியில் வாழும் மக்களுக்கும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் இந்த பிரச்சினைகளுக்கு நீண்டகால, குறுகிய கால தீர்வுகள் இடைக்கால வரவு-செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.
சமூக பாதுகாப்பு தொடர்பிலும் இந்த வரவு- செலவு திட்டத்தில் கூறப்பட்டு இருக்க வேண்டும்.
இந்த வரவு செலவு திட்டத்தில் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.
யுனிசெப் நிறுவனம் தெற்காசிய நாடுகள் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையின் நிலவரத்தை அவதானிக்கும்போது மிகவும் பாரதூரமானதாகவே காணப்படுகின்றது.
எமது நாட்டு மக்களின் போசனை, சுகாதாரம், சிறுவர் பாதுகாப்பு, கல்வி தொடர்பில் குறிப்பிட்டுள்ள யுனிசெப் நிறுவனமானது நல்லவிதமாக எதனையும் கூறவில்லை.
போசனை மட்டம் உள்ளிட்ட விடயங்களில் நாடு எவ்வாறான நிலைமையை எதிர்கொண்டுள்ளது என்பது தொடர்பில் நாமும் அறிவோம்.