ஜனாதிபதியின் காலோசிதமானதும்(காலத்திற்கு பொருத்தமான) துணிச்சலானதுமான தீர்மானங்கள் நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்க உதவியதாக தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 16வது சர்வதேச ஆய்வு மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில், சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்கள் குறித்து விளக்கமளித்த சாகல ரத்நாயக்க, பொருளாதாரப் பிரச்சினைகளை நிவர்த்திசெய்து, நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.
அதனால் கிட்டியுள்ள மேம்பாடுகளை வரவேற்ற அவர், நாட்டின் முன்னேற்றத்திற்காக அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
‘இலங்கை கடந்த வருடத்தில் எதிர்கொண்ட மிகக்பெரிய பொருளாதார நெருக்கடியை போன்ற நிலைமையை, பல்வேறு நாடுகள் எதிர்கொண்டுள்ளன.
தற்போது அதிலிருந்து எவ்வாறு மீள முடியும் என்பதையே கண்டறியவேண்டும். அதற்காக ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநர் மற்றும் திறைசேரியின் செயலாளருடன் இணைந்து மேற்கொண்ட காலோசிதமானதும் துணிச்சலானதுமான தீர்மானங்களின் பலனாக இன்று நாடு ஓரளவு நிலையான தன்மையை அடைந்துள்ளது. எவ்வாறாயினும், இன்றும் நாம் நெருக்கடியிலிருந்து முழுமையாக மீளவில்லை. நாட்டில் நிலையான அபிவிருத்தியை பேணிக்கொண்டு மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக நாம் இன்னும் பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’ என சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.